Published : 25 May 2014 11:42 AM
Last Updated : 25 May 2014 11:42 AM

மதுரை நகைக் கடையில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: மேற்கு வங்க இளைஞர்களை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தது போலீஸ்

மதுரை நகைக்கடையில் துப்பாக் கியைக் காட்டி கொள்ளையடித்த மேற்கு வங்க மாநில இளைஞர்கள் 3 பேரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.

மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் ரங்கராஜன் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு யானைக்கல்லைச் சேர்ந்த சக்திவேல் (20), வடக்கு ஆவணி மூலவீதியைச் சேர்ந்த ஜோதிமணி (50) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். சனிக்கிழமை காலை ஊழியர் சக்திவேல் கடையைத் திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

சாவியைக் கேட்டு மிரட்டல்

அப்போது வடமாநில இளைஞர்கள் 3 பேர் அங்கு வந்து சக்திவேலிடம் பேச்சு கொடுத்தனர். அவர்கள் நெக்லஸ் வாங்க வந்துள்ளதாகவும், நகைகளை எடுத்துக் காட்டுமாறும் கூறினர். அதற்கு, ‘உரிமையாளர் இன்னும் வரவில்லை. 10 மணிக்கு மேல் வாருங்கள்’ என சக்திவேல் பதில் கூறிக் கொண்டிருந்தபோதே திடீரென ஒருவர் துப்பாக்கியை எடுத்துக்காட்டி சக்திவேலை மிரட்டினார். மற்ற 2 பேரும் சக்திவேலின் கைகளை பின்னால் வைத்துக் கட்டினர். மேலும் நகைக்கடையின் ஷட்டரை மூடினர். அதன்பின் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டகம், கல்லாப்பெட்டியின் சாவியைத் தருமாறு கூறி சக்திவேலை துன்புறுத்தினர்.

சாவி உரிமையாளரிடம் இருப்ப தாகக் கூறியதால், தாங்கள் கொண்டுவந்திருந்த உபகரணங்கள் மூலம் கல்லாப்பெட்டியைத் திறந்தனர். அதில் இருந்த 21 பவுன் நகையை எடுத்தபின், பெட்ட கத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதற்குள் கடையின் மற்றொரு ஊழியரான ஜோதிமணி அங்கு வந்தார். கடையின் ஷட்டர் முழுவதுமாக மூடப்படாமல் இருந்ததால் சந்தேகப்பட்டு கதவைத் திறந்தார். அப்போது உள்ளே இருந்த 3 பேரும் அதிர்ச்சியடைந்து, வெளியே ஓடிவர முயன்றனர். இதைக்கண்ட ஜோதிமணி கூச்சலிட, அருகில் பழக்கடை வைத்திருந்த பத்மா என்பவரும் ஓடிவந்தார்.

இருவரும் சேர்ந்து 3 கொள்ளையர்களையும் மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதுடன், இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனாலும் விடாமல் கொள்ளையர்களை விரட்டிச்சென்றனர்.

போலீஸாருக்கும் மிரட்டல்

மேற்கு ஆவணி மூலவீதி அருகே இவர்களுடன் போக்கு வரத்து போலீஸ் எஸ்.ஐ. காசிநாதன், தலைமைக் காவலர்கள் நாகராஜ், அர்ஜுன் உள்ளிட்டவர்களும் கொள்ளையர்களை விரட்டிச் சென்றனர். அப்போது 3 கொள்ளையர்களும் வீடுகளுக்குள் புகுந்து, மாடிவிட்டு மாடி தாவி ஓடிச் சென்றனர். திடீரென அவர்களைக் காணவில்லை. சந்தேகமடைந்த போலீஸார் வீடுவீடாகப் புகுந்து சோதனையிட்டனர். அப்போது தானப்ப முதலி சந்து பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 பேரை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் போலீஸாரிடமும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தப்ப முயன்றனர்.

அருகில் சென்ற போலீஸாரை கத்தியாலும் தாக்கினர். இதில் நாகராஜ் என்ற போலீஸ்காரரின் கையில் லேசான காயம் ஏற்பட்டபோதிலும் மற்ற போலீஸாரும், பொதுமக்களும் இருவரை மடக்கிப் பிடித்தனர். மற்றொருவரைக் காணவில்லை.

பிடிபட்டவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் மேற்குவங்க மாநிலம் ஹைடன்பீச் பகுதியைச் சேர்ந்த சைதாப் (22), சீசான் (20) என்பது தெரியவந்தது. அவர்களை திலகர்திடல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று துணை கமிஷனர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா தலைமையிலான போலீஸார் விசாரித்தனர்.

காட்டிக் கொடுத்த செல்போன்

அப்போது தப்பிய நபரிடமிருந்து சைதாப், சீசான் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. உடனே, அந்த எண்ணின் நெட்வொர்க் ஏரியாவைக் கண்காணித்தபோது ரயில் நிலையப் பகுதியைக் காட்டியதால் சீருடை அணியாத தனிப்படையினர் அங்கு விரைந்தனர். முதல் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வடமாநில இளைஞரிடம் விசாரித்தபோது, முதலில் முன்னுக்குப் பின்னாக பேசியவர் திடீரென துப்பாக்கியை எடுத்து காட்டி தனிப்படை போலீஸாரை மிரட்டினார். சுதாரித்த போலீஸார் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். விசாரணையில் அவர் சைஜா ஜா (22) என்பதும், குவாஹாட்டி ரயிலில் ஏறி மதுரையிலிருந்து தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த நபரிடமிருந்து ஒரு துப்பாக்கி, 21 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சில வெள்ளி பொருள்களையும் பறிமுதல் செய்தனர். மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

3 தனிப் படைகள் அமைப்பு

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சில நாள்களுக்கு முன்பாகவே மதுரை வந்துவிட்ட இவர்கள், ரயில் நிலையப் பகுதியிலுள்ள விடுதியில் தங்கி ஒவ்வொரு கடையாகக் கண்காணித்து வந்துள்ளனர். அந்த அடிப்படையில்தான் ரங்கராஜனுக்கு சொந்தமான நகைக்கடையை குறிவைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அதற்குள் ஆள் சென்றுவிட்டதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள் தப்பின. இவர்களுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி, வேறு ஏதேனும் இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனரா என விசாரித்து வருகிறோம். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றனர்.

கொள்ளை நடந்த நகைக் கடைக்கு மிக அருகிலேயே மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x