Published : 14 Mar 2020 09:02 AM
Last Updated : 14 Mar 2020 09:02 AM
நாமக்கல் அருகே கார் மீது லாரி மோதியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள சின்னவேப்பநத்தம் என்ற இடத்தில் நேற்று (மார்ச் 13) நள்ளிரவு, சேலத்தில் இருந்து திருச்சிக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி, எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர். கார் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் 6 பேரின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 1 மணிநேரத்திற்குப் பிறகு உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் நாமக்கல் செல்லப்பா காலனியைச் சேர்ந்த ஓட்டுநர் சசிக்குமார், சதீஷ்குமார், பிஹாரைச் சேர்ந்த ஜீகாந்திரன், பேஜான்குமார், தர்மா, பப்புலு என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் அனைவரும் காட்டுபுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் டைல்ஸ் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பும்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீஸார் விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT