Published : 14 Mar 2020 08:42 AM
Last Updated : 14 Mar 2020 08:42 AM
குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) குறித்து சிறுபான்மை மக்களிடம் திமுக அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பாக நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: சட்டப்பேரவை கூட்டம் நடக்கும்போது முதல்வரும், அமைச்சர்களும் திட்டங்கள், அறிவிப்புகளை வெளியில் வெளியிடக்கூடாது என்பது மரபு. ஆனால்,நேற்று (மார்ச் 12) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ‘தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: என்பிஆரில் கூடுதலாக கேட்கப்பட்டுள்ள 3 கேள்விகள் குறித்து தமிழக அரசு கேட்ட விளக்கத்துக்கு மத்திய அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. எனவே,தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அறிவிக்கப்படவில்லை என்று மார்ச் 11-ம் தேதி சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன். அதைத்தான் செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். இதில் உரிமை மீறல் எதுவும் இல்லை. என்பிஆரில் ஆவணங்கள் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதில் உண்மைஇல்லை. என்பிஆரில் எந்த ஆவணங்களும் கேட்கப்படவில்லை. இதை நாடாளுமன்றத்தில் மத்தியஉள்துறை அமைச்சரே தெளிவுபடுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைக் கூறி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வரும்போது ஆட்சியில் இருக்கும் நாங்கள் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆவணங்கள் எதுவும் கேட்கப்படவில்லை என்றால் எதற்காக விளக்கம் கேட்டுமத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறீர்கள். அமைச்சர் பேசியதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.
முதல்வர் பழனிசாமி: என்பிஆர்கணக்கெடுப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றெல்லாம் கூறி சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புதான் தற்போது நடக்கவுள்ளது. ஆனால், அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காதீர்கள் என்று மக்களிடம் பதற்றமான சூழலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறீர்கள். 2003-ல் பாஜக – திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி என்பிஆரில் சில அம்சங்களை சேர்க்கவும், நீக்கவும் முடியும். அதன் அடிப்படையில் இப்போது என்பிஆரில் கூடுதலாக சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு பயந்து கொண்டிருக்கிறோம். சிறைக்கு செல்வீர்கள் என்றெல்லாம் எங்களைப் பற்றி நீ்ங்கள் பேசி வருகிறீர்கள். எந்த காலத்திலும் அது நடக்காது. முன்னாள் அமைச்சர்கள் மீது எவ்வளவு வழக்குகள் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
பேரவைத் தலைவர் பி.தனபால்: அமைச்சர் பேரவையில்பேசியதையும், செய்தியாளர்களிடம் பேசியதையும் ஒப்பிட்டுப்பார்த்தேன். பேரவையில் பேசியதைத்தான் செய்தியாளர்களிடமும் அமைச்சர் பேசியுள்ளார். எனவே, இதில் உரிமை மீறல் எதுவும் இல்லை. எனவே, இப்பிரச்சினை குறித்து இனி யாரும் பேச வேண்டாம்.
துரைமுருகன்: தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியதை அமைச்சர் இங்கு ஒப்புக்கொள்ள தயாரா?
முதல்வர் பழனிசாமி: அமைச்சர் அனைத்தையும் தெளிவுபடுத்தி விட்டார். ஏதாவது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறீர்கள். பேரவையில் பதிவான குறிப்புகளின் அடிப்படையில்தான் கேள்விகள் கேட்க வேண்டு்ம். பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் பேச முடியாது. பேரவையில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசுகிறீர்கள். வெளியில் பேசுவதுதான் மக்களுக்குப் போய் சேர்கிறது. இதனால் மிகப்பெரிய பதற்றம் ஏற்படுகிறது.
டெல்லியில் நடந்த பிரச்சினை அனைவருக்கும் தெரியும். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், எம்எல்ஏக்களும் உணர்வுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். சாதி, மத பேதங்கள் இல்லாமல் தமிழகம் அமைதியான மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் அமைதி ஏற்பட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசியதை பேரவையில் அமைச்சர் அறிவிக்க வேண்டும்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: என்பிஆர் குறித்து தமிழக அரசுகேட்ட விளக்கத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை. எனவே, என்பிஆர் குறித்துஅறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் என்பிஆர்கணக்கெடுப்பு தொடங்கப்படவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT