Published : 14 Mar 2020 08:28 AM
Last Updated : 14 Mar 2020 08:28 AM
காஞ்சிபுரத்தில் கொலை, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான தணிகா என்கிற தணிகைவேல் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தனிப்படை போலீஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 2 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் தனபாலன் சாராய விற்பனை, ஆள்கடத்தல், கொலை, நில அபகரிப்பு போன்ற பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அவர் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தாதாவாக வலம் வந்தார். போலீஸாரின் பிடி இறுகியதும் அங்கிருந்து தப்பிச் சென்று கம்போடியாவில் தங்கி இருந்தார். அங்கிருந்தபடியே காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு ஜவுளி வியாபாரிகள், பெரும் பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்து வந்தார்.
இங்கிருந்த ஸ்ரீதரின் உறவினர் தணிகா மற்றும் கார் ஓட்டுநர் தினேஷ் ஆகியோர் அவருக்கு அடியாட்களாக இருந்து உதவி வந்தனர். கம்போடியாவில் ஸ்ரீதர் தனபாலன் தற்கொலை செய்து கொண்டதும், அவரது இடத்தை பிடிப்பதற்கு தணிகா மற்றும் தினேஷ் இடையில் கடும் போட்டி ஏற்பட்டது.
இவர்களின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமானதைத் தொடர்ந்து இருவரின் ஆதரவாளர்களையும் போலீஸார் கைது செய்யத் தொடங்கினர். பலரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். எனவே, இரு தரப்பினரும் தலைமறைவாக இருந்தனர். ஆனாலும் காஞ்சிபுரத்தில் உள்ள தங்கள் ஆதரவாளர்கள் மூலம் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
போலீஸாரின் தேடுதல் வேட்டையில் தினேஷ் கடந்த சில தினங்களுக்கு முன் தனது நண்பர்கள் சிலருடன் சிக்கினார். அவரை கைது செய்த போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான தணிகா தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரது செல்போன் எண்ணை போலீஸார் கண்காணித்து வந்தனர். அவர் நேபாளம் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறினர். அவர்களை அங்கு கைது செய்ய மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இதற்கிடையில் இவர்கள் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு வந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான குழுவினர் வாரணாசிக்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த தணிகாவையும், அவருடன் இருந்த அவரது கூட்டாளிகள் வசா(எ)வசந்த், சந்துரு என்கிற சந்திரசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் வசந்த் மீது காஞ்புரத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் 8 வழக்குகளும், சந்திரசேகர் மீது சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது. தணிகா மீதும் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரையும் காஞ்சிபுரம் அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்களது பின்னணி குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT