Published : 14 Mar 2020 08:25 AM
Last Updated : 14 Mar 2020 08:25 AM
தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்து விரைவுப் பேருந்துகளும் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவிட் - 19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு முதல்வர் உத்தரவிட்டார். குறிப்பாக, பயணிகள் அதிகம் பயணம் செய்கின்ற பேருந்துகளை தினமும் முறையாகப் பராமரித்து, சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கு.இளங்கோவன் கூறியதாவது:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏறத்தாழ 1,082 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. அதில் பயணிக்கின்ற 70 ஆயிரம் பயணிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையிலும், கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அந்தந்த பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் சுகாதார முறையில் பேருந்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், படுக்கை, இருக்கை, படுக்கை விரிப்புகள், தலைக்கவர், ஜன்னல் திரை ஆகியவைகள் கிருமிநாசினிகள் மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பிறகே பேருந்துகளை இயக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT