Published : 14 Mar 2020 08:22 AM
Last Updated : 14 Mar 2020 08:22 AM

பி.எச்டி படிப்பில் குறையும் எஸ்சி, எஸ்டி மாணவர் சேர்க்கை: ஐஐடி-களில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகிறதா?- தேசிய எஸ்.சி. ஆணையம் நோட்டீஸ் அனுப்ப திட்டம்

சென்னை

மனோஜ் முத்தரசு

நாட்டில் உள்ள 23 ஐஐடிகளில் பிஎச்.டி படிப்பில் சேரும் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதனால், ஐஐடிகளில் முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கேட்க தேசிய பட்டியலின ஆணையம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் முக்கியமான 23 நகரங்களில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி) செயல்படுகிறது. இதில், 49.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி, 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கும் (ஓபிசி), 7.5 சதவீதம் பழங்குடியினருக்கும் (எஸ்டி), 15 சதவீதம் பட்டியலின மக்களுக்கும் (எஸ்சி) வழங்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் (2015முதல் 2019 வரை) ஐஐடிகளில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டப்படிப்புக்காக (பிஎச்.டி)25,007 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஐஐடி சார்பில்ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

ஐஐடிகளில் மொத்தம் உள்ள 25,007 இடங்களில் எஸ்சி பிரிவு மாணவர்கள் வெறும் 2,268 பேர்மட்டுமே (9.1 சதவீதம்) சேர்ந்துள்ளனர். அதேபோல், எஸ்டி பிரிவு மாணவர்கள் 526 பேரும் (2.1 சதவீதம்), ஓபிசி பிரிவைச் சேர்ந்த 5,811 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 16,402 இடங்களை பொது பிரிவினரே (ஓசி) நிரப்பி உள்ளனர். 23 ஐஐடிகளில் மும்பை (2,877 இடங்கள்), கான்பூர்(1,653), டெல்லி(3,081), சென்னை(3,874), கோரக்பூர் (3,057) ஐஐடிகளில்தான் அதிக அளவிலான பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

அதன்படி, இதர 4 ஐஐடிகளைவிட சென்னை ஐஐடிதான் பிஎச்.டி ஆராய்ச்சி படிப்புக்கு அதிக மாணவர் சேர்க்கை நடத்தி உள்ளது. அதில் 6.4 சதவீதம் பேர் எஸ்சி பிரிவினரும் 1.3 சதவீதம் எஸ்டி பிரிவினரும் 27.9 சதவீதம் ஓபிசி பிரிவினரும் 64.4 சதவீதம் ஓசி பிரிவினரும் சேர்ந்துள்ளனர். அதிக இடங்களை கொண்ட சென்னை ஐஐடியில், இந்தியாவிலேயே எஸ்சி மாணவர் சேர்க்கை மிகக் குறைவாக உள்ளது. அதேபோல், கான்பூர் ஐஐடியில் உள்ள 1,653 பிஎச்டி மாணவர்களில் வெறும் 11 பேர் மட்டுமே எஸ்டி பிரிவு மாணவர்கள். அதிகபட்சமாக கோரக்பூர் ஐஐடியில் 12.7 சதவீதம் எஸ்சி பிரிவினர் சேர்ந்துள்ளனர்.

அதேபோல், 23 ஐஐடிகளில் உள்ள 6,043 பேராசிரியர்களில், எஸ்சி பிரிவைச் சேர்ந்த 149 பேர் மட்டுமே (2.8 சதவீதம்) பணிபுரிந்து வருகிறார்கள். இதனால், ஐஐடிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய பட்டியலின மக்கள் ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ ஐஐடியில் கல்வி மற்றும்வேலை வாய்ப்பில் எஸ்சி, எஸ்டிபிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளன. ஆனால், அதனை அப்படியேஏற்க முடியாது. எனவே, பிஎச்.டிமற்றும் பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஐஐடிகளிடம் விளக்கம் கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து ஐஐடிகளுக்கும் விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்” என்றார்.

இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியை தொடர்பு கொண்டபோது, “கருத்து சொல்ல விரும்பவில்லை” என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x