Last Updated : 14 Mar, 2020 07:24 AM

 

Published : 14 Mar 2020 07:24 AM
Last Updated : 14 Mar 2020 07:24 AM

‘கோவிட்-19’ வைரஸால் ஏற்றுமதி முடக்கம்; ஓசூரில் ரூ.8 கோடிக்கு ‘கொய்மலர்’ வர்த்தகம் பாதிப்பு: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

கோவிட்-19 வைரஸ் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், ஓசூரில் தேங்கியுள்ள கொய்மலர்கள்.

கிருஷ்ணகிரி

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கொய்மலர் ஏற்றுமதி முடங்கியுள்ளது. ரூ.8 கோடி மதிப்புக்கு மலர் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது எனமலர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்,தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமைக்குடில்கள் அமைத்து விவசாயிகள் மலர்சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரோஜா, ஜெர்பரா, கார்னேஷன் உள்ளிட்ட கொய் மலர்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. திருவிழாக்கள், மேடை அலங்காரம் ஆகியவற்றுக்கு கொய்மலர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், ஓசூர் கொய்மலர்களுக்கு ஆண்டு முழுவதும் வரவேற்பு இருக்கும்.

மேடை அலங்கார மலர்களான கொய் மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும், கேரளா உள்ளிட்ட வெளிமாநில விற்பனையே அதிக அளவு நடந்துவந்தது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் நடைபெறும் விழாக்களில் கொய்மலர் அலங்காரம் பிரபலமானது என்பதால், ஓசூரில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் கொய்மலர்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் சீனாவில் பரவத்தொடங்கியது. இது தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு காரணமாகமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஷாப்பிங் மால் போன்றபகுதிகளுக்கு செல்ல வேண்டாம்என பொதுமக்கள் எச்சரிக்கப் பட்டுள்ளனர். கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால், மேடைஅலங்காரத்துக்கு உபயோகப்படுத் தப்படும் கொய்மலர்களை ஓசூரில்இருந்து கேரளாவுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்புவது தடைபட்டுள்ளது. இதனால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஓசூர் மலர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஓசூரில் மலர்சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிலர் கூறியதாவது:

கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிந்தவுடன், நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாக்களில் அலங்காரத்துக்கு கொய்மலர்களை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால், கோவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக, விழாக்கள், கொண்டாட்டங்கள் தவிர்க்கப்படுவதால், கொய்மலர்கள் ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓசூரில் கொய்மலர்கள் டன் கணக்கில் தேங்கி உள்ளன. உள்ளூரில் போதிய விலை இல்லாததால், ரோஜா, ஜெர்பரா போன்ற மலர்கள் பறிக்கப்படாமல் தோட்டங்களில் காய்ந்து வருகின்றன.

விழாக்காலங்களின்போது 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜாரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது ஒரு கட்டு ரோஜா ரூ.5 முதல் 10 வரை மட்டுமே விற்பனையாகிறது.

இதேபோன்று, 10 மலர்கள் கொண்ட ஜெர்பரா ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.10-க்கு மட்டுமே விற்பனையாகிறது.

விலை வீழ்ச்சி காரணமாக மிகவும் வேதனையடைந்துள்ள மலர் சாகுபடியாளர்கள் பலர், கொய்மலர்களை பறிக்காமல் தோட்டங்களில் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் டன் கணக்கில் மலர்கள் தேங்கி, குப்பைத்தொட்டியில் வீசும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மலர் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஓசூர் சிறு, குறு மலர் விவசாயிகள் சங்கத் தலைவர் பாலசிவபிரசாத் கூறும்போது, ‘‘கடந்த மார்ச் 5-ம்தேதியிலிருந்து மலர் விற்பனை, ஏற்றுமதி வெகுவாகக்குறைந்து ஒவிட்டது.

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகைக்காக மூடப்பட்ட மலர் விற்பனை மையங்கள், அதைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாகதிறக்கப்படவில்லை. தற்போது வடமாநிலங்களில் ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இன்று (நேற்று) முதல் பெங்களூரு மலர் சந்தையும் மூடப்பட்டுள்ளது.

ஓசூரில் ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கொய்மலர்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் ரூ.2 கோடிக்கு மேல் உற்பத்திச் செலவுஇழப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.8 கோடிவரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு உள்ளதால், அங்கு மலர் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளனர்.

காதலர் தினத்தில் மலர் விற்பனை ஓரளவுக்கு கைகொடுத்த நிலையில், கோவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக விற்பனை, ஏற்றுமதி முழுமையாக பாதிப்படைந்துள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x