Published : 13 Mar 2020 03:28 PM
Last Updated : 13 Mar 2020 03:28 PM
கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மது போதையில் வாகனம் ஓட்டி வருபவர்களை கண்காணிக்க எடுக்கப்படும் சோதனையை தவிர்க்க மதுரை போலீஸார் முடிவு செய்துள்ளனர். இது விரைவில் தமிழகம் முழுதும் அமலாகும் என தெரிகிறது.
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல், பாதிக்கப்பட்டவர் எச்சில் திவலைகளிலிருந்து விலகி நிற்பது, முகக்கவசம் அணிவது என பல்வேறு தடுப்பு முறைகள் கையாளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொதுமக்களை கையாளும் போலீஸார், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், விமான நிலையம், பேருந்து, ரயில் நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வாகன ஒட்டிகளை கண்காணிக்க முன்பு போலீஸார் முகத்துக்கு நேரே ஊதச்சொல்வார்கள். அவ்வாறு குடித்தது தெரியவந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சான்றிதழ் பெற்று நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆனால் போக்குவரத்துத் துறை நவீனமயமாதல், வழக்குகளை எளிதில் கையாள நவீன கருவிகள் காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க நவீன கருவி வந்துள்ளது. இதில் டியூப் ஒன்றை சொருகி வாகன் ஓட்டியை ஊதச்சொல்வார்கள்.
அவர் குடித்திருந்தால் உடலில் ஆல்கஹால் அளவை அது காட்டும். தற்போது கரோனா வைரஸ் அச்சம் உள்ள நிலையில் ஒருவரை பிடித்து வாயை ஊதச்சொல்வது தற்கொலைக்கு சமானம் என முடிவு செய்துள்ள மதுரை காவல்துறை கரோனா பிரச்சினை தீரும்வரை வாகன ஓட்டிகள் மது அருந்தி வாகனம் ஓட்டுகிறார்களா என சோதனையிடுவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் உத்தரவிட்டுள்ளார். இதனால் குடிமகன்கள் சந்தோஷமடையலாம். ஆனால் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளதால் மது அருந்தாமல் வாகனம் ஓட்டுவதே சிறந்தது.
மதுரையைப் போன்றே தமிழகம் முழுதும் விரைவில் இந்த அறிவிப்பு வரலாம் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT