Published : 13 Mar 2020 02:19 PM
Last Updated : 13 Mar 2020 02:19 PM
என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், என்பிஆர் கணக்கெடுப்பை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்பதை சட்டப் பேரவையில் அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று என்பிஆர் குறித்து நடைபெற்ற விவாதத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியதாவது:
“ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்பிஆர் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. அந்த உத்தரவை நிறைவேற்றாமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம் என்ற அடிப்படையில்தான் அமைச்சர் உதயகுமார் நேற்றைய தினம் ஒரு விளக்கம் தந்திருக்கிறார்.
மத்திய அரசிடம் சில விளக்கங்கள் கேட்டிருக்கிறோம். அந்த விளக்கங்கள் வந்த பிறகுதான் முடிவு செய்வோம் என்ற அடிப்படையில் அமைச்சர் அறிக்கை வந்திருக்கிறது. அந்த விளக்கம் வந்தால்தான் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ள நிலையில், இந்த சட்டப்பேரவையில் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை நிறைவேற்ற இந்த அரசு முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
எந்த ஆவணங்களும் கேட்கப்படவில்லை என்று அமைச்சர் உதயகுமார் சொல்கிறார். ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்ன கடிதம் எழுதி இருக்கிறீர்கள்? என்ன விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள்.
இந்தப் பிரச்சினையை நான் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்வதற்குக் காரணம், என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் சொல்லி இருக்கிறார். அதைச் சட்டப்பேரவையிலாவது பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து அமைச்சர் உரிய விளக்கத்தைத் தர வேண்டும். ஏனென்றால் அதை ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளது.
விளக்கம் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அமைச்சர் வெளியில் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகையில் செய்தியாக வந்திருக்கிறது. அதைத்தான் திரும்பத் திரும்ப நாங்கள் வலியுறுத்துகிறோம். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இந்த அரசு முன்வரவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தியையாவது இந்த அவையிலே பதிவு செய்ய வேண்டும். அமைச்சர் செய்வாரா? என்று கேட்கிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் பேரவையில் உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment