Last Updated : 13 Mar, 2020 08:19 AM

 

Published : 13 Mar 2020 08:19 AM
Last Updated : 13 Mar 2020 08:19 AM

8,000 அடி உயரத்தில் உள்ள கொழுக்குமலை எஸ்டேட்டில் பழமை மாறாத ஆங்கிலேயர் கால தேயிலை தொழிற்சாலை- 14 டீ வகைகள் தயாரிப்பு

தேயிலைத் தொழிற்சாலையின் முகப்புத் தோற்றம்

போடி

தேயிலைச் செடிகள் வளரும், உலகிலேயே மிக உயரமான இடமான கொழுக்குமலையில் ஆங்கிலேயர் காலத்து தொழிற்சாலை பழமை மாறாமல் தற்போதும் இயங்கி வருகிறது. இங்கு 14 வகை டீ தூள்கள் தயாரிக்கப்படுகின்றன.

போடி தாலுகா கொட்டக்குடி அருகே கொழுக்குமலை எஸ்டேட் உள்ளது. இப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 8,000 அடி உயரத்தில் உள்ளது.

இங்கு ஆங்கிலேயர் காலத்தில் 1935-ம் ஆண்டு தேயிலைத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் ரசாயன பயன்பாடு இன்றி விளைவிக்கப்படும் தேயிலைகள் இங்கு கொண்டு வரப்பட்டு டீ தூளாக மாற்றப்படுகின்றன.

இன்றைக்கும் ஆங்கிலேயர் வடிவமைத்த இயந்திரங்களே இங்கு பயன்படுத்தப்படுகின்றன. தேயிலை இலைகள் தொழிற்சாலை யின் மேற்பரப்பில் உள்ள சல்லடைகளில் கொட்டப்பட்டு அதில் உள்ள ஈரத்தன்மை வெகுவாய் உறிஞ்சப்படுகின்றது.

பின்னர் ராட்சத இயந்திரங்களில் இவை அரைக்கப்பட்டு மீண்டும் 90 டிகிரி செல்சியஸில் அடுத்த கட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு தேயிலைகள் பவுடர் வடிவில் மாற்றம் செய்யப்பட்டு கொட்டுகின்றன. அவை மீண்டும் ரகம் பிரித்து இயந்திரங்களுக்குள் செலுத்தப்பட்டு சிறிய குச்சிகள், தூசுகள் வெளியேற்றப்பட்டு தரமான டீ தூள் கிடைக்கிறது.

பால், சுடுநீரில் கலப்பது என்று இரண்டு பிரிவுகளில் சுமார் 14 வகையான தேயிலை தூள்கள் தயாரிக்கப்படுகின்றன.

தொலைத்தொடர்பு இல்லாத காலத்தில் பணியாளர்களின் கவனத்தை ஈர்க்க இங்கு ஆங்கிலேயர் வட்டவடிவ இரும்பு வளையத்தைப் பயன்படுத்தினர். இதைசுத்தியலால் தட்டும்போது எழும்ஒலி எஸ்டேட் முழுவதும் எதிரொலிக்கும். யானை, புலி, காட்டெருமை உள்ளிட்டவை தேயிலைத்தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டால் கூட்டு மணி என்று சொல்லப்படும் தொடர் மணியை அடிப்பர். தற்போது இதன் தேவை குறைந்ததால் நேரத்தை தெரிந்து கொள்வதற்காக மட்டும் மணி ஒலிக்கப்படுகிறது.

இதுகுறித்து தொழிற்சாலைக் கண்காணிப்பாளர் சிரோன்மணி கூறியதாவது:

உலகிலேயே தேயிலை விளையும் உயரமான இடம், ரசாயனக் கலப்பில்லாதது என்ற இரு பெரும் தனிச் சிறப்பு இத்தொழிற்சாலைக்கு உள்ளது. இங்கு வொயிட் டீத்தூள் என்ற தனி ரகம் உண்டு. செடிகளின் காம்புகளை மட்டும் எடுத்து வந்து அரைத்து தயாரிக்கப்படுகிறது. இது கிலோ ரூ.45,000 ஆகும். சுடுதண்ணீரில் போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. யாராவது கேட்டால் மட்டுமே இவற்றை உற்பத்தி செய்து தருகிறோம். வீடுகள், வணிக ரீதியான பயன்பாடு என்று அதிக கலர், ஸ்ட்ராங்க், மணம் என்று ஒவ்வொரு விதங்களில் தயாரிக்கப்படுகிறது. அழுத்தம், வெப்பம், அவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ரகங்கள் உருவாகும் என்றார்.

மேலும், இந்த தொழிற்சாலையைப் பார்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி உள்ளதால் தினமும் ஏராளமானோர் இங்கு டீத்தூள் தயாரிக்கப்படுவதைக் கண்டு மகிழ்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x