Published : 12 Mar 2020 05:50 PM
Last Updated : 12 Mar 2020 05:50 PM

70 வயதுக்கு மேல் உள்ளவர்களை கரோனா வைரஸ் தாக்கும் என்பதால் அச்சப்படத்தேவை இல்லை: துரைமுருகனுக்கு கேள்விக்கு  முதல்வர் பழனிசாமி  நகைச்சுவை

கரோனா வைரஸ் குறித்து துரைமுருகன் கேள்வி எழுப்பி பேசியதற்கு முதல்வர் நகைச்சுவையாக பதிலளித்தார். 70 வயதுக்கு மேலுள்ளவர்களை தாக்கும் என்பதால் துரமுருகன் அச்சமடைய தேவையில்லை சுகாதாரத்துறை சிறப்பாக உள்ளது என முதல்வர் நகைச்சுவையாக பதிலளித்தார்.

கரோனா வைஅரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் பதிலளித்து பேசியதாவது:

“கரோனா வைரஸ் பற்றிய சந்தேகங்கள் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விளக்கமாக, தெளிவாக சிறப்பாக பேசியிருக்கிறார். என்னென்ன காரணத்தினால் இந்த நோய் வரும், எப்படி எல்லாம் பரவும் என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது, இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினால், தும்மினால் வரும் என்று தான் சொல்லி இருக்கிறார்களே தவிர, இங்கு யாருக்கும் பாதிப்பு இல்லை.

அதனால் நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஏற்கனவே நல்வாழ்வுத் துறை அமைச்சர் சொன்னார், 70 வயதிற்கு மேலே பாதிப்புக்கு வாய்ப்பு என்று, அண்ணன் அதனால் அச்சப்படுகிறீர்களோ, என்னவோ, தெரியவில்லை. அந்த கவலையே வேண்டியதில்லை. நமது தமிழக சுகாதாரத் துறையை பொறுத்தவரைக்கும், நம்முடைய மருத்துவர்கள் சிறப்பான மருத்துவர்கள்.

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் தமிழகத்திலே இருக்கின்றார்கள். ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் அவரை குணப்படுத்துகிற அளவிற்கு சிறப்பான சிகிச்சையை நம்முடைய மருத்துவர்கள் அளித்திருக்கிறார்கள். அதனால் கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது. வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மூலமாகத் தான் இந்நோய் பரவுவதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஸ்க்ரீனிங் (Screening)செய்யப்பட்டு, அதில் யாருக்கு இந்நோய் வந்திருக்கிறதோ, அவர்களைத் தான் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்கிறார்கள். அதில் பாதிப்பு இல்லாதவர்களை வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள்.

ஆகவே, தமிழகத்தை பொறுத்தவரைக்கும் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலோ, தும்மினாலோ, அல்லது நீங்கள் சொன்னது போல மேஜையை தொட்டாலோ, திருமணத்திற்கு போனாலோ, விமான நிலையத்திற்கு போனாலோ, ரயில் நிலையங்களுக்கு போனாலோ இப்படிப்பட்ட பாதிப்பு, அவர்கள் மூலமாக வருகிறது.

விமானத்திலிருந்து இறங்கும் போதே, நம்முடைய சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களை பரிசோதித்து, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் வருத்தப்பட தேவையில்லை, அச்சப்படவும் தேவையில்லை. உங்களுக்கு வயது அதிகமாக இருந்தாலும் கூட, அதற்கும் தகுந்த சிகிச்சை கொடுப்பதற்கு நம்முடைய மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினால் தான் இந்த பிரச்சனைக்கு உட்படுகிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தான் இந்த நோயே இருக்கிறது. உள்நாட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கும் கிடையாது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களை பரிசோதனை செய்து, அவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவாக, விளக்கமாக பேசிவிட்டார்”.

இவ்வாறு முதல்வர் பேசினார். .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x