Published : 12 Mar 2020 12:06 PM
Last Updated : 12 Mar 2020 12:06 PM
மக்களிடம் எழுச்சி வரும்போது அரசியலுக்கு வருவதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று (மார்ச் 12) ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"அண்ணா நான் மிகவும் மதிக்கும் தலைவர். எத்தனை தலைவர்களை அவர் உருவாக்கினார். இப்போது எத்தனை நல்ல தலைவர்கள் இருக்கின்றனர்? வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தால் போதும் இங்கே வந்துவிடுவர். இது என் மனதில் இருந்து வரும் வியூகம். நாம் இரு ஜாம்பவன்களை எதிர்க்கிறோம். அவர்கள் அசுர பலத்துடன் இருக்கின்றனர்.
ஒரு கட்சிக்கு வாழ்வா சாவா என்ற நிலை. இன்னொரு கட்சி ஆட்சியை கையில் வைத்துவிட்டு முழு கட்டமைப்புடன் இருக்கிறது. சினிமா புகழ், ரசிகர்களை நம்பி ஜெயிக்க முடியுமா? தேர்தல் என்ன சாதாரண விஷயமா? எல்லா விமர்சனங்களையும் கடந்து அரசியலைச் சந்திக்க நேர்ந்தாலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் மக்களிடம் முதலிலேயே சொல்லிவிட வேண்டும்.
எழுச்சி உருவாக வேண்டும். மக்கள், இளைஞர்கள் மத்தியில் எழுச்சி உருவானால் பலம், அதிகாரம் தூள்தூளாகிவிடும். அரசியல் அலை, இயக்கம் உண்டாக வேண்டும். எழுச்சி உண்டாகும் என நான் நம்புகிறேன். இது புரட்சிக்குப் பெயர்போன மண். 1960-70களில் நடந்த புரட்சி இப்போது நடக்க வேண்டும். மக்கள் அதிசயம், அற்புதத்தை நிகழ்த்த வேண்டும். இது நடக்காமல் வாக்குகளைப் பிரிப்பதற்கு நான் வர வேண்டுமா? புரட்சி நடக்க வேண்டும் என்பதை மூலை முடுக்கெல்லாம் போய் சொல்ல வேண்டும். அந்த எழுச்சி தெரியட்டும், அப்போது நான் அரசியலுக்கு வருகிறேன்".
இவ்வாறு ரஜினி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT