Published : 12 Mar 2020 09:25 AM
Last Updated : 12 Mar 2020 09:25 AM

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல்: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்புப் பணி தீவிரம் - லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

பண்ணையில் இருந்து முட்டை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

நாமக்கல்

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ளகோழிப்பண்ணைகளில் நோய்தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோழிப்பண்ணைகளுக்கு வரும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 4 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 70 லட்சத்துக்கும் அதிகமான முட்டை கேரள மாநிலத்துக்கு நாள்தோறும் லாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கோழிக்கோட்டில் நோய்த் தாக்கம்

இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்துக்கு முட்டையை விற்பனைக்கு கொண்டு செல்லும் லாரிகள் மூலம் பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கேரளா சென்று திரும்பும் லாரிகள் மற்றும் அம்மாநிலத்தில் இருந்து வரும் லாரிகளுக்கு தமிழக எல்லையில் கால்நடை பராமரிப்புத் துறைமூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

நோய்த் தடுப்புப் பணி தீவிரம்

அதேவேளையில் கேரள மாநிலகோழிப்பண்ணைகளில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் நோய் தடுப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு அவ்வப்போது மருந்து கலந்து தண்ணீர் ஸ்பிரே செய்யப்படுகிறது.

அதேபோல் கோழிப் பண்ணைகளுக்குள் நுழையும் லாரிகள் மற்றும் முட்டைகளை ஏற்றி வெளியே செல்லும் லாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்

இதுகுறித்து நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில்பணிபுரியும் கால்நடை மருத்துவர் சரண்யா கூறும்போது, "நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆண்டு முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சலால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ஹைட்ரோ பெராக்சைடு கலந்த குடிநீர் அளிக்கப்படுகிறது. அதுபோல், பண்ணைகளுக்குள் நுழையும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு பார்மலின், சிட்ரிக் ஆசிட் மருந்து கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

பண்ணைகளில் இருந்து செல்லும் லாரிகள், பணியாளர்களுக்கு நாள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x