Published : 11 Mar 2020 01:00 PM
Last Updated : 11 Mar 2020 01:00 PM
சட்டப்பேரவையில் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரியதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள், சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சிஏஏ எனும் குடியுரிமைச் சட்டத்தில் இஸ்லாமியர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நிலை உள்ளதால் அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது.
இது தவிர என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து அனைவரும் பாதிக்கப்படுவோம் என்கிற அச்சம் பொதுமக்கள், சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என்பிஆர் குறித்து சிறுபான்மை மக்கள் அச்சமடையவேண்டாம். 3 முக்கிய கேள்விகள் கேட்கப்படாது. இதுகுறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று மானியக் கோரிக்கைக்கான கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது நேரமில்லா நேரத்தில் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் என்பிஆருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரக் கோரிக்கை வைத்தார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
சிறுபான்மை மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் உள்ளன, 13 மாநிலங்களில் கூட்டணியில் உள்ள பிஹார் மற்றும் சட்டத்தை ஆதரித்த ஆந்திர மாநில, தெலங்கானா மாநில அரசுகளும் என்பிஆரை அமல்படுத்த மாட்டோம் என முடிவெடுத்துள்ளன. எம்.பி.க்களும் எதிர்த்துள்ளனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையிலும் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் பேசினார்.
இந்தச் சட்டத்தால் எந்த மக்களுக்கும் பாதிப்பில்லை. குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்புமில்லை. ஏற்கெனவே அரசு இதை தெளிவுபடுத்திவிட்டது. இந்தப் பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளதால் பேச முடியாது என அமைச்சர் உதயகுமார் கூறினார்.
வண்ணாரப்பேட்டை, மண்ண்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரவு பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்துப் பேசுங்கள் என ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
ஆனால், கோரிக்கை மறுக்கப்பட்டதால் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மீண்டும் சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT