Published : 11 Mar 2020 11:50 AM
Last Updated : 11 Mar 2020 11:50 AM
விமான நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லை என, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீர்ப் சிங் புரி, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு எழுத்துபூர்வமாக அளித்த கடிதத்தில் கேள்வி எழுப்பியதாவது:
"உடான் திட்டத்தின் கீழ் 100 விமான நிலையங்களை மேம்படுத்த அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதற்கான காலக்கெடு, குறிப்பாகத் தமிழகத்தில் பணிகள் நடைபெறுகின்ற பணிகள் குறித்த தகவல்களைத் தருக. மேற்கண்ட பணிகளுக்கு, 2020-21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கிய தொகை எவ்வளவு? அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்யத் திட்டம்? மேற்கண்ட திட்டங்களில், தனியார்-பொதுமக்கள் கூட்டு உண்டா?
பல்வேறு விமான நிறுவனங்களில், விமானங்களை இயக்குகின்ற, பயணிகளுக்கு உதவுகின்ற பெண்களிடம் இருந்து, பணி இடங்களில் சீண்டல்கள் குறித்து, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவா? விசாகா குழு அளித்த வழிகாட்டுதல்களின்படி, இதுகுறித்து ஆய்வு செய்யும் குழுக்களை, விமான நிறுவனங்கள் அமைத்து இருக்கின்றதா?"
இவ்வாறு வைகோ கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விகளுக்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எழுத்துபூர்வமாக அளித்த விளக்கம்:
"உடான் திட்டத்தின் கீழ், 100 இடங்களில் விமான, ஹெலிபேட் தளங்கள், நீர்நிலைகளில் விமான இறங்கு தளங்கள் அமைப்பதற்கு, அரசு திட்டம் வகுத்துள்ளது.
2016 அக்டோபர் மாதம் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், இந்திய விமான நிலையங்களின் ஆணையம், இதுவரையிலும், 3 சுற்றுகள் மின் ஏலம் நடத்தி இருக்கின்றது. இந்தத் திட்டங்களை நிறைவேற்ற, 10 ஆண்டுகள் கால வரையறை வகுக்கப்பட்டு இருக்கின்றது. அடுத்தடுத்த சுற்று ஏலங்களில், ஆணையத்தால் தேர்வு செய்யப்படுகின்ற மேலும் பல விமான நிலையங்கள், இந்தத் திட்டத்தில் இணைக்கப்படும்.
தமிழ்நாட்டில், நெய்வேலி, ராமநாதபுரம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, விமான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் விமானங்களுக்கு விதிக்கப்படுகின்ற வரிகளின் மூலமாகவே, இந்தத் திட்டங்களுக்கான நிதி திரட்டப்படும்.
செயலிழந்து கிடக்கின்ற, பகுதி மட்டுமே இயங்குகின்ற, மாநில அரசுகள், இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்பில் உள்ள விமான நிலையங்கள், வான்வழிகள், ஹெலிபேட் தளங்கள், நீர்நிலை விமான இறங்கு தளங்களை மேம்படுத்தி, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, ரூ.4,500 கோடியை, மத்திய அமைச்சரவையின் பொருளாதார ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களைக் குறைந்த கட்டணத்தில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்ற முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், தனியார்-பொதுமக்கள் கூட்டுத் திட்டத்தின் கீழ், விமான நிலையங்களை மேம்படுத்துகின்ற வேறு திட்டம் எதுவும் இல்லை.
பெண்களுக்கு எதிரான சீண்டல்கள் குறித்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும், பணி இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்புச் சட்டம் - 2013 இன்படி, ஆய்வு செய்யப்படுதல் வேண்டும். இதுகுறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தச் சட்டத்தின்படி, அனைத்து விமான நிறுவனங்களும், ஐசிசி குழு அமைக்க வேண்டும். இதுகுறித்த தகவல்களை, தலைமை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என மேற்படிச் சட்டத்தில் பரிந்துரைகள் எதுவும் இல்லாததால், இதுகுறித்த ஆவணங்களை, தலைமை இயக்குநர் அலுவலகம் பராமரிப்பது இல்லை".
இவ்வாறு ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT