Published : 11 Mar 2020 09:05 AM
Last Updated : 11 Mar 2020 09:05 AM

தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகளை தடுக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை

தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அளவில் நிபுணர் குழுக்களை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு நேற்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 2014 முதல் 2018 வரை நடைபெற்றுள்ள மாணவர் தற்கொலைகள் குறித்தவிவரங்களை தேசிய குற்ற பதிவு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தில் 6,056 மாணவர்களும் தமிழகத்தில் 4,552 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இருமடங்கு அதிகரிப்பு

தேர்வுகள், குடும்ப பிரச்சினைகள், கல்லூரிகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளால் நாடு முழுவதும் மாணவர்களது தற்கொலைகள் கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளன. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை மனநிலையை போக்கவும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கவும் தேவையான ஏற்பாடுகள் தற்போது கல்வி வளாகங்களில் இல்லை.

எனவே, மாணவர்களின் தற்கொலையை தடுக்க கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.அக்குழுவின் ஆலோசனைகளின்படி தற்கொலைகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மாணவர்கள், இளைஞர்களுக்கு உரிய மனநல பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அளவிலும் ஒன்றிய அளவிலும் நிபுணர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும்.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x