Published : 10 Mar 2020 08:20 PM
Last Updated : 10 Mar 2020 08:20 PM
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு, சிபிசிஐடி, சிபிஐ, டிஎன்பிஎஸ்சி ஆகியவை 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரை முதலில் மறுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பின் காவல்துறையில் புகார் அளித்தது. அதன் பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயக்குமார் உட்பட பலரைக் கைது செய்தனர்.
மேலும், டிஎன்பிஎஸ்சி தரப்பில், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்கியதுடன், அடுத்த தேர்வுகளில் பங்கேற்கவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், ''குரூப்- 4 தேர்வு முறைகேடு குறித்தும், குரூப்-2 ஏ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்தும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். குரூப்-4 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், அழியும் மையைப் பயன்படுத்தியதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாக்க முயற்சிப்பதாகவே இது அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருகின்றன. அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம். ஆகவே சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பாகவே இருக்கும்.
அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகளின் ஆசியுடன் நடந்துள்ள இந்த முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டுமென்றால், இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் தொடர்பாக வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து தமிழக அரசு, சிபிசிஐடி, சிபிஐ, டிஎன்பிஎஸ்சி இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT