Published : 12 Aug 2015 02:29 PM
Last Updated : 12 Aug 2015 02:29 PM
கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி வழியாக ஹவுராவுக்கு இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பல பெட்டிகள் துருப்பிடித்திருக்கின்றன.
கன்னியாகுமரியிலிருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா வரையில் வாரம் ஒருமுறை இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12666) சனிக்கிழமைகளில் காலை 7.50 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலுக்கும், காலை 9.35 மணிக்கு திருநெல்வேலிக்கும் வருகிறது.
அதன்பின் மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை என்று முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்கிறது. நேற்று இந்த எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தபோது பயணிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், இந்த ரயிலின் பெட்டிகள் பலவும் துருப்பிடித்திருந்தது. சரிவர பராமரிக்கப்படாத பெட்டிகள் அதில் இணைக்கப்பட்டிருந்தன. சில பெட்டிகளில் ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்திருந்தன. சில பெட்டிகளில் ஓட்டைகள் இருந்தன.
அரசுப் பேருந்துகள் பலவும் ஓட்டை உடைசல்களுடன் இயக்கப் படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அதற்கு போட்டி என்று சொல்லும் அளவுக்கு ரயில் பெட்டிகளின் நிலை மோசமாக இருப்பது வேதனையளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
நீண்ட தூர ரயில்களின் நிலையே இப்படியிருந்தால் எப்படி? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பல ரயில்களில் மின்விசிறிகள் சரிவர இயங்காதது, மூட்டைப்பூச்சி, எலித்தொல்லை, சரியாக பராமரிக்காததால் கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவது போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற துருப்பிடித்திருக்கும் பெட்டிகளால் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெட்டிகளை மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
உதிரி பாகங்கள் கிடைப்பதில்லை
இது குறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி. எட்வர்ட் ஜெனி கூறியதாவது: கன்னியாகுமரி- ஹவுரா எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகளை பராமரிக்கும் பணிகள் நாகர்கோவில் ரயில் நிலைய பணிமனையில் மேற்கொள்ளப் படுகிறது. பெரிய நகரங்களில் ரயில் நிலையங்களில் உள்ள பணிமனைகளில் கிடைக்கும் உதிரி பாகங்கள் நாகர்கோவில் பணிமனையில் கிடைப்பதில்லை.
இதனால் ரயில் பெட்டிகள் பராமரிப்பு என்பது பெயரளவுக்கே இருக்கிறது. பல்வேறு ரயில்களில் பயன்படுத்திய பெட்டிகளை வாரம் ஒருமுறை இயக்கும் ஹவுரா எக்ஸ்பிரஸில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். துருப்பிடித்திருக்கும் இந்த ரயிலின் பெட்டிகளை மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் பணிமனையில் போதிய உதிரி பாகங்கள் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT