Published : 10 Mar 2020 04:56 PM
Last Updated : 10 Mar 2020 04:56 PM
மதுரையில் இதுவரை யாருக்கும் கரோனா (கோவிட்-19) பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி. வினய் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை எடுத்து, மருத்துவர்கள் தேனி சிறப்பு ரத்தப் பரிசோதனை மையத்திற்கு அனுப்பியுள்ளனர். தற்போது வரை அதன் முடிவு வரவில்லை. ஆனால், மதுரையில் ‘கரோனா’ வைரஸ் ஒருவருக்கு வந்ததாகத் தகவல் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் இன்று, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ‘கரோனா’ வைரஸ் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பிரிவில் தற்போது கண்காணிப்புக்கு வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் விபரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது மதுரையில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று கூறினார்.
தாமாகவே முன்வந்து சிகிச்சைக்கு உட்பட்ட நபர்..
அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்பேரில் தேவையான அனைத்து வசதிகளோடு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களில் கரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.
நேற்று அனுமதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த அனில்ராஜ் மதுரையில் ஜிஎஸ்டி கலால் மற்றும் சுங்க வரி துறையில் பணியாற்றுகிறார்.
அடிக்கடி இத்தாலி நாட்டிற்குச் சென்று வருபவர் என்பதால், தாமாகவே முன்வந்து கரோனா தனிப்பிரிவில் சேர்ந்து கொண்டார். தற்போது அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.
தென் மாவட்டங்களிலேயே பெரிய மருத்துவமனையாகத் திகழும் மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் ஆய்வுக்கான உபகரணங்கள் ஏன் அமைக்கப்படவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, மருத்துவமனை முதல்வர் சங்குமணி, ‘‘தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் மதுரையிலும் அதற்குரிய வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அது நிறைவு பெற்றுவிட்டால் மதுரையிலேயே கரோனா குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT