Published : 10 Mar 2020 02:49 PM
Last Updated : 10 Mar 2020 02:49 PM
கோவிட்-19 வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூணாறு உள்ளிட்ட கேரளப் பகுதிகளில் 7-ம்வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சபரிமலைக்கு வரும் பக்தர்களை முறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோவிட்-19வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 15பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 12பேருக்கு இந்தபாதிப்பு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 149பேர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப் பிரிவிலும், 967பேர் வீடுகளில் சுகாதாரத்துறை கண்காணிப்பிலும் இருந்து வருகின்றனர்.
மூணாறு, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலா பகுதிக்கு அதிகளவில் வெளிநாட்டு பயணிகள் வருவதை முறைப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 10-நாட்களுக்கு மேலாக ஆன்லைன் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தேக்கடி, மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி அணை, ராஜமலை, குண்டலை, ஆத்துக்காடு, டாப்ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிகாணப்படுகின்றன.
திருமணநிகழ்ச்சியை ஆரவாரம் இல்லாமல் நடத்தவும், பொதுக்கூட்டங்களை முடிந்தளவு தவிர்க்கவும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
மூணாறு உள்ளிட்ட கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் இன்றுமுதல்(புதன்) மழலையர் பள்ளி முதல் 7-ம்வகுப்பு வரை பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத வரும் மாணவ,மாணவியர் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்புகளுடன் வரும்படி கல்வித்துறை அறிவித்துள்ளது.
சிறப்புவகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 13-ம் தேதி மாதாந்திர பூஜைக்கு நடைதிறக்கப்பட உள்ளது. வரும் 18-ம் தேதி வரை வழிபாடுகள் நடைபெறும். இருப்பினும் பக்தர்கள் வருகையை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கோவிட்-19வைரஸ் அச்சுறுத்தலுடன் தற்போது கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பறவைக்காய்ச்சலும் பரவி வருகிறது.
எனவே லோயர்கேம்ப், முந்தல், கம்பம்மெட்டு உள்ளிட்ட கேரள நுழைவாயில் பகுதிகளில் சுகாதாரத்துறையினர், கால்நடைத்துறையினருடன் இணைந்து முகாம் அமைத்து சோதனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று முந்தலில் ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமையில் இப்பணி நடைபெற்றது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் ஆக்டிவேட்டட் 5 எனும் கரைசல் தெளிக்கப்படுகிறது. தற்போது பகலில் மட்டுமே இதுபோன்ற சோதனைகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
விரைவில் இம்முகாம் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை அலுவலர்களுக்கு வேலை ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT