Published : 10 Mar 2020 11:59 AM
Last Updated : 10 Mar 2020 11:59 AM

ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காமல் அலைக்கழிப்பதன் நோக்கம் என்ன? - வைகோ கேள்வி

வைகோ: கோப்புப்படம்

சென்னை

ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காமல் அலைக்கழிப்பதன் நோக்கம் என்ன என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (மார்ச் 10) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக அரசு, ரயில்வே துறையை தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், 50 ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும், 150 ரயில்வே வழித்தடங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகின.

ஏற்கெனவே டெல்லி - லக்னோ, மும்பை - அகமதாபாத் வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த லாபம் ஈட்டும் ரயில்வே துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் பாஜக அரசு தனியாருக்கு விற்பனை செய்து வருகின்றது.

ஐஆர்சிடிசி நிறுவன பங்குகளில் 12.6 விழுக்காடு தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டமும் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இந்தியாவில் மொத்தம் மூன்று ரயில் இன்ஜின் தயாரிப்பு நிறுவனங்களும், மூன்று ரயில் பெட்டித் தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன. மேற்குவங்கத்தில் உள்ள சித்தரஞ்சன் லோகோ ஒர்க்ஸ், உத்தரப்பிரதேசம் வாரணாசியில் செயல்பட்டு வரும் டீசல் லோகோ மோடிவ் ஒர்க்ஸ், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இயங்கி வரும் லோகோ மார்டனைசேஷன் ஒர்க்ஸ் ஆகியவை ரயில் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள ரயில் கோச் தொழிற்சாலை, உத்தரப்பிரதேசம் ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் தொழிற்சாலை மற்றும் சென்னையில் உள்ள ஐசிஎஃப் ஆகியவை ரயில்வே பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பெங்களூருவில் ரயில் வீல் தொழிற்சாலை ரயில் சக்கரங்கள் தயாரித்து வருகின்றது. இவை அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான முதல்படியாக அவற்றை கார்ப்பரேஷன்களாக மாற்றி, ரயில்வே துறையிலிருந்து பிரித்துவிட பாஜக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே துறையை ஒட்டுமொத்தமாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவில் உள்ள பாஜக அரசு, தற்போது ரயில்வே துறையில் நடைபெற்று வரும் ஒப்பந்தப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால், பல்வேறு பணிகள் நிறுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், ரயில்வே கட்டமைப்புப் பணிகளான சுரங்கப் பாதை அமைத்தல், நடைமேடைகள் அமைத்தல், ரயில் நிலையக் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை நாடு முழுவதும் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிர்வாகம் அலைக்கழித்து வருகின்றது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் 300 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1,200 கோடியை வழங்காமல், கடந்த 4 மாதங்களாக அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.

ரயில்வே துறையில் தனியார்மயத்தை விரைவுபடுத்தும் வகையில் முதல்கட்டமாக, ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை வழங்காமலும், நடைபெற்று வரும் பணிகளைக் கிடப்பில் போடவும் மத்திய அரசு முனைந்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சீர்குலைத்து, தனியாருக்கு தாரை வார்க்கும்போதும் மத்திய அரசு இதேபோன்று ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகையை அளிக்காமல் பணிகளையும் நிறுத்திவிட்டு நெருக்கடியை அதிகரித்தது. அதே உத்தியை மத்திய அரசு ரயில்வே துறையிலும் கடைபிடித்து வருகின்றது.

ரயில்வே நிர்வாகம் 2 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காததால், ஆந்திர மாநிலம் மெகபூப்நகரைச் சேர்ந்த ரயில்வே ஒப்பந்ததாரர் டி.வெங்கட ரெட்டி என்பவர் தற்கொலை செய்துகொண்டார். அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு கடந்த மார்ச் 6 ஆம் தேதி, நாடு முழுவதும் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே துறை மக்களுக்கு பணியாற்றும் சேவைத் துறை ஆகும். ஆனால் மத்திய அரசின் போக்கு ஒட்டுமொத்த ரயில்வே துறையையே சீர்குலைத்து விடும்.

ஆகவே, மத்திய அரசு ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடுவதுடன், ரயில்வே ஒப்பந்தப் பணிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்கி, கட்டமைப்புப் பணிகள் விரைந்து நடைபெற ஆவன செய்ய வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x