Published : 10 Mar 2020 09:54 AM
Last Updated : 10 Mar 2020 09:54 AM

மக்கள் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்க திட்டம் வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

சென்னை, ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற கடலோர பகுதிகளில் மக்கள் கடலில் மூழ்கி பலியாவதை தடுக்க திட்டம் ஒன்றை வகுக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தரப்பில் 22 மாவட்டங்களின் ஆட்சியர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், பலியானவர்களின் விவரங்கள் குறித்த விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டில் 220 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை உள்பட 13 மாவட்டங்களில் 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், 986 பேர் வரை பலியாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் இருவர் கடலில் மூழ்கி பலியான விஷயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பொதுமக்கள் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர்.

மேலும், ராமேஸ்வரம், திருச்செந்தூர், சென்னை மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க, தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து கூட்டாக திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

மேலும், மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் அறிக்கை தாக்கல் செய்த 22 மாவட்டங்களில் தவிர்த்து மீதமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x