Published : 10 Mar 2020 08:17 AM
Last Updated : 10 Mar 2020 08:17 AM
கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகளுக்கு எதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் எத்தனை தனிநபர்களுக்கு எதன் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கடப்பாக்கம் குப்புசாமி என்பவர் மீன்பிடி வலை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அவரது மகன் சதீஷ்குமார், தொழிற்சாலை உள்ளிட்ட ரூ.5 கோடி மதிப்பு உள்ள சொத்துகளை தனது பெயருக்கு மாற்றித்தரக் கூறி, உறவினர்களுடன் வந்து குப்புசாமியை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சூணாம்பேடு போலீஸில் குப்புசாமி புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கிருந்த போலீஸார், சதீஷ்குமாரின் பெயருக்கு அனைத்து சொத்துகளையும் எழுதிக்கொடுக்கும்படி குப்புசாமியிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் வழக்கறிஞரை சந்திக்கச் சென்ற தனது சகோதரரான குப்புசாமி வீடு திரும்பவில்லை எனக்கூறி அவரது சகோதரர் பக்தவச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வுமனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான குப்புசாமி, தன்னை தாக்கிய மகன் மீதுபோலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், உள்ளூர் ரவுடியான அவனுடன் கைகோத்துக்கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது மகன் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் தன்னை தாக்கிய மகன் மீது புகார் அளிக்கச்சென்ற தந்தைக்கு, போலீஸாரே கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கு கடந்த 2-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, 6-ம் தேதி பட்டியலிடப்பட்டு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும் என அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் அலுவலகம், சம்பந்தப்பட்ட சூணாம்பேடு காவல் நிலையத்துக்கு 6-ம் தேதியே நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் இல்லை. போலீஸார் நீதிமன்றத்தின் நோட்டீஸ்களைக்கூட மதிப்பது இல்லை என்பதற்கு இந்த வழக்கு உதாரணம்.
எனவே, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி, சூணாம்பேடு காவல் ஆய்வாளர் தாரணீஸ்வரி, எஸ்ஐ பரசுராமன் ஆகிய மூவரும் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டுள்ள குப்புசாமிக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், போலீஸ் பாதுகாப்பு பெறும் பலர் அதை தங்களுக்கான சமூக அந்தஸ்து என கருதி தைரியமாக கட்டப்பஞ்சாயத்துகளிலும் ஈடுபடுகின்றனர்.
எனவே இந்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகளுக்கு எதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது? எத்தனை தனிநபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு இதுவரை எதற்காக வழங்கப்பட்டு வருகிறது? அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைதானா என்பது எத்தனை நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது? தனிமனிதர்களுக்கு எதன் அடிப்படையில், எந்த அளவுகோலின்படி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பது குறித்து மூவரும் வரும் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT