Published : 09 Mar 2020 05:47 PM
Last Updated : 09 Mar 2020 05:47 PM
குடும்ப வன்முறையால் ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் சாந்தி, தன்னம்பிக்கைப் பெண்ணாக மாறி மகளிர் தினத்தன்று தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துள்ளார். இவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சாதித்த பெண்களைக் கொண்டாடும், ஆவணப்படுத்தும் வழக்கமான மகளிர் தினமாக இல்லாமல், முன்னேறத் துடிக்கும் சாமானியர்களை அங்கீகரிக்க 'நியூஸ்7' தமிழ் முடிவெடுத்தது. அந்த வகையில் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட சாந்தி என்னும் பெண்ணை மகளிர் தினத்தன்று செய்தித் தொகுப்பாளராக்கியது.
இந்த யோசனை எப்படி வந்தது? நிகழ்ச்சிக்கான முன் தயாரிப்புகள், எதிர்வினைகள் எவ்வாறு இருந்தன? என்பது குறித்து 'நியூஸ்7' தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் ச.கோசல் ராம் கூறும்போது, ''இது ஒட்டுமொத்தக் குழுவின் முயற்சி. செய்தி வாசிக்க அழகு முக்கியமில்லை என்பதை உணர்த்த விரும்பினோம். இரண்டாவதாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, தன்னம்பிக்கையை ஏற்படுத்த எண்ணினோம்.
சாந்தி 100 சதவீதம் சரியாக வாசித்தார் என்று சொல்ல முடியாது. எனினும் குறுகிய கால இடைவெளியில் 1 வாரப் பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டார். ஊடகத் துறைக்கே அறிமுகமில்லாத அவர் ஆரம்பத்தில் தடுமாறினார். பிறகு தைரியமாக செய்தி வாசிக்க ஆரம்பித்தார்.
எந்தவொரு தமிழ் ஊடகமும் இது போன்ற முன்முயற்சியை மேற்கொண்டதில்லை. ஆங்கில ஊடகங்கள்கூட இதை முயற்சித்ததில்லை என்றே நினைக்கிறேன்'' என்று கோசல் ராம் தெரிவித்தார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட சாந்தி
திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சாந்தி. சண்டையில் தாயை நோக்கி தந்தை வீசிய அமிலத்தை, தானே வலிந்து ஏற்றுக்கொண்டவர். உடல் ரீதியிலும் மன அளவிலும் பெரும் போராட்டங்களை எதிர்கொண்டவர். எனினும் தனக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து விரைவில் வெளியே வந்தார். பீனிக்ஸ் பெண்ணாய் எழுந்து நின்று, சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
தற்போது தீக்காயம், அமில காயம், தாக்குதல்கள், குடும்ப வன்முறை உள்ளிட்ட அனைத்து வகையான பாதிப்புகளுக்கு ஆளாகும் பெண்கள், அதில் இருந்து வெளியே வர முன்னுதாரணமாக மாறி நிற்கிறார் சாந்தி. அவர்களுக்காகவே செயல்படும் தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தனது வாழ்க்கைப் பயணம் குறித்துப் பேசுபவர், ''அந்தக் காலகட்டம் மிகுந்த வேதனையான ஒன்றாக இருந்தது. என்றாலும் பாதிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், சீக்கிரத்திலேயே வெளியே வந்துவிட்டேன். இரண்டு மகன்கள் முகப்பேரில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
6 ஆண்டுகள் கணக்காளராகப் பணிபுரிந்து இருக்கிறேன். அதனால் செய்தி வாசித்த அனுபவம் புதிதாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. 1 வார காலப் பயிற்சி உதவிய போதும் சரியாக செய்தி வாசித்தேனா என்று தெரியவில்லை. 11 வயதான எனது இளைய மகனை உடன் அழைத்துச் சென்றிருந்தேன்.
ஒவ்வொரு செய்தி இடைவேளையின்போதும் அவர் தனது கைகளை உயர்த்திக் காட்டி, உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். வாசித்து முடித்த பிறகு அனைத்து மூத்த செய்தியாளர்களும் என்னைப் பாராட்டினர். செய்தி வாசிப்பதைப் பார்த்த தொண்டு நிறுவனத் தோழமைகள், குடும்பத்தினர் பாராட்டுகின்றனர். இது எந்தவொரு புது விஷயத்தையும் முயற்சித்துப் பார்க்கும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது'' என்று புன்னகைக்கிறார் சாந்தி.
சமூக, உடல், மன அழுத்தங்களுக்கு ஆட்படும் பெண்கள் அவற்றில் இருந்து வெளியே வந்து வாழ, எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சிங்கப் பெண் சாந்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT