Published : 09 Mar 2020 02:27 PM
Last Updated : 09 Mar 2020 02:27 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
துறைவாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கிய பேரணிக்கு மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது.
குடியுரிமையில் மதத்தைப் புகுத்துவதைக் கண்டித்தும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிராகரிக்க வலியுறுத்தியும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை தற்போதைய குடியுரிமைத் திருத்தச் சட்டத்திருத்தத்தின்படி மேற்கொள்ளக்கூடாது எனவும், இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிராகரிக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை கோட்டை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் பேரணி தொடங்கியது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், வெகுஜன அரங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஒன்று கூடினர். சட்டப்பேரவை நடப்பதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பேரணியாகச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். சில தொண்டர்கள் முண்டியடித்து கோட்டை நோக்கி முன்னேற முயற்சித்தனர்.
போலீஸார் கே.பாலகிருஷ்ணனைக் கைது செய்ய முன்னேறியபோது பெண் தொண்டர்கள் தடுத்துக் கோஷமிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல் உயர் அதிகாரிகள் பேசி அனைவரையும் கைது செய்து போலீஸ் வேனில், மாநகரப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், மார்ச் 23-ம் தேதியான பகத்சிங் நினைவு தினத்தன்று தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டத்தை நடத்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT