Published : 09 Mar 2020 09:56 AM
Last Updated : 09 Mar 2020 09:56 AM
ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்கு மாற்றாக பல்வேறு இயற்கை பொருட்கள் சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளன. தமிழகத்தில் இதில் முதலிடத்தை பனையோலை பொருட்கள் பிடித்திருக்கின்றன. சோப்பு உறை, சோப்பு பெட்டி, பணப்பை, பென்சில் பாக்ஸ், தட்டுகள், பல அளவுகளில் பெட்டிகள், கூடை கள், மிட்டாய் பெட்டிகள், பைகள், விசிறி, தொப்பி, பேக்கரி பெட்டிகள், பாய் என, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும், அலங்கார பொருட் களும் பனையோலை மூலம் தயாரிக்கப்படுகின்றன.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் பனையோலை பொருட்கள் தயாரிப்பானது, கிராமப்புற பெண் களுக்கான நல்ல வாழ்வாதாரம் தரக்கூடிய சுயதொழிலாக மாறியிருக்கிறது. தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி சார்பில் ‘உன்னத் பாரத் அபியான்’ என்ற திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கு பனையோலை பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சியை முடிப்பதற்கு முன்பே அவர்களுக்கு பனையோலை பொருட்கள் ஆர்டர் குவிகிறது.
சிறந்த வாழ்வாதாரம்
பனையோலை பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்து வரும் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த எக்ஸ்.ராசாத்தி கூறியதாவது: பனையோலையால் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தூய மரியன்னை கல்லூரி சார்பில் தூத்துக்குடி அருகேயுள்ள அந்தோணியார்புரம், கோரம்பள்ளம், சேர்வைக்காரன் மடம் கிராமங்களில் பெண்களுக்கு பனையோலை பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்துள்ளேன். ஒவ்வொரு கிராமத்திலும் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்தோணியார்புரத்தில் 23 பெண்களும், கோரம்பள்ளத்தில் 24 பேரும், சேர்வைக்காரன்மடத்தில் 7 பேரும் பயிற்சி முடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே தற்போது தனியாக பனையோலை பொருட் களை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். கிராமப்புற பெண்களுக்கு மாற்றுத் தொழிலாக மட்டுமல்லாமல் சிறந்த வாழ்வாதாரமாகவும் பனை யோலை பொருட்கள் தயாரிப்பு தொழில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.
ரூ.10 முதல் ரூ.800 வரை
பனையோலை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி பெற்ற கோரம் பள்ளத்தை சேர்ந்த வினோதா கூறியதாவது: நான் கோரம்பள்ளம் ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினராக இருக்கிறேன். பனையோலை பொருட்கள் மீதான ஆர்வம் காரணமாக பயிற்சியில் பங்கேற் றேன். 10 நாட்கள் பயிற்சி பெற்றுள்ளேன். தற்போது என்னால் அனைத்து வகையான பனையோலை பொருட்களையும் தயாரிக்க முடியும்.
நாங்கள் 24 பேர் பயிற்சி பெற்றுள்ளோம். எங்களுக்கு பல்வேறு ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. ரூ.10 முதல் ரூ.800 வரையிலான பொருட்களை தயாரிக்கிறோம். கோரம்பள்ளம் பகுதியில் அரசு சார்பில் தயாரிப்பு மற்றும் விற்பனை கூடம் ஏற்படுத்தி தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT