Published : 09 Mar 2020 09:56 AM
Last Updated : 09 Mar 2020 09:56 AM

காஞ்சியில் ஒருவருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட விவகாரம்: தீவிர கண்காணிப்பில் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் - மருத்துவ குழுவினருடன் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அவசர ஆலோசனை

ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்தவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம்

ஓமன் நாட்டிலிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்தவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கவும், லேசான அறிகுறி உள்ளவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினரால் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 27 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(45) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஓமனில் பணியாற்றிவந்த இவர் கடந்த 27-ம் தேதி காஞ்சிபுரம் வந்தார். இங்கு வந்த சில நாட்களில் காய்ச்சல் வந்துள்ளது. சில தனியார் மருத்துவமனைகளில் இவர் சிகிச்சை பெற்றதாகத் தெரிகிறது. அதன் பின்னர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற சோதனையில் இவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனால் இவர் குடும்பத்தினர் நண்பர்கள் என பலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்குமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவருடன் நெருக்கமாக இருந்தவர்களை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் பா.பொன்னையா கூறும்போது, "கோவிட்-19 பாதிப்பு காரணமாக இவருடன் நெருக்கமாக இருந்தவர்களை பரிசோதிக்கும்படி கூறியுள்ளோம். அவர்கள் தனியாக கண்காணிக்கப்படுகின்றனர். இங்கு யாரெல்லாம் இவருடன் இருந்தனரோ அவர்களை கண்காணித்து வருகிறோம். இந்த வைரஸ் 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருக்கும் இடத்தில் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. எனவே மக்கள் இதுகுறித்து பெரிதாக அச்சமடையத் தேவையில்லை" என்றார்.

தடுப்பு நடவடிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் நகர சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவக் குழுவினருடன் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி அவசர ஆலோசனை நடத்தினார். கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர் இருந்த பகுதிகளுக்குச் சென்று அங்கு கிருமி நாசினியை தெளித்துள்ளோம். அவரது வீட்டில் உள்ளோர், அவருடன் நெருக்கமாக இருந்தோர் என 27 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 28 நாட்கள் கண்காணிக்க உள்ளோம். ஒருவர் தவிர வேறு யாருக்கும் அறிகுறி இருப்பது உறுதியாகவில்லை. யாருக்கேனும் அறிகுறி தெரிந்தால் அவர்களை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ கண்காணிப்புக் குழுவினருக்கு முகக்கவசம் கொடுத்துள்ளோம். பொதுமக்கள் கைகளை தினமும் 15 முறையாவது நன்றாக கழுவ வேண்டும். தும்மும்போது கைகுட்டைகளை வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் காஞ்சி அமுதன் கூறும்போது, "காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பலர் வந்து செல்வதால் கோவிட்-19 பரவுவதற்கான காரணிகள் அதிகம். இந்த மாவட்டத்தில் உடனடியாக பரிசோதனை மையங்களை அமைக்க வேண்டும்" என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தனி வார்டு மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டுள்ளது.

ரத்தம் எடுத்தவருக்கு காய்ச்சல்

காஞ்சிபுரத்தில் கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர் அருகில் உள்ள ஆய்வகத்தில் ஏற்கெனவே ரத்த பரிசோதனை செய்துள்ளார். அங்கு ரத்த மாதிரியை எடுத்த 20 வயது பெண்ணுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்டது டைபாய்ட் காய்ச்சல் என்பது தெரிந்தது. தற்போது அவருக்கு காய்ச்சல் குணமானதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x