Published : 09 Mar 2020 07:37 AM
Last Updated : 09 Mar 2020 07:37 AM

இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றபோது விபத்து: பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதி ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு

பாலத்தில் இருந்து விழுந்த இரு சக்கர வாகனத்தை மீட்கும் போலீஸார்.

சென்னை

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது பேசின் பாலத்தின் தடுப்புக் கம்பியில் மோதிய விபத்தில் ஐ.டி. ஊழியர் உயிரிழந்தார். அவரது நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

வில்லிவாக்கத்தை அடுத்த ராஜமங்கலத்தைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் டேனியல் (23). தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (23). இருவரும் நேற்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்புக்கு சென்றனர். அங்குள்ள கடையொன்றில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வண்ணாரப்பேட்டை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். வாகனத்தை லிவிங்ஸ்டன் ஓட்டினார். கார்த்தி பின்னால் அமர்ந்திருந்தார்.

பேசின் பாலத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியின் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தரத்தில் பறந்து சென்று, கீழே இருந்த தண்டவாளத்தில் விழுந்தது. இதில் லிவிங்ஸ்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார்த்திக்குக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதைப்பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். லிவிங்ஸ்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை போலீஸார் கிரேன் மூலம் மீட்டனர்.

விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இருவரும், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புவேலியை இடித்துக்கொண்டு கீழே விழுவதும், அதே நேரத்தில் அவர்கள் விழுந்த பகுதியில் விரைவு ரயில் செல்வதும் பதிவாகியிருந்தது.

விபத்து நடந்த பேசின் பாலத்தில் பக்கவாட்டு சுவர் அமைக்க தற்போது வேலை நடந்து வருகிறது. அதனால் அப்பகுதியில் தற்போது தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்துள்ள நிலையில் பக்கவாட்டு சுவரை கட்டும் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்றும், பணிகள் முடியும் வரை இந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x