Published : 09 Mar 2020 07:09 AM
Last Updated : 09 Mar 2020 07:09 AM
அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் 2-வதுமாநில மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக நெல் ஜெயராமனின் சொந்த ஊரான ஆதிரங்கத்தில் இருந்து இரா.ஜெயராமன் நினைவு சுடரை ஏந்தியபடி மாநாடு நடைபெறும் இடத்துக்கு விவசாயிகள் வந்தனர்.பின், மாநாட்டு அரங்கில் நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பத்தில் சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது.
மாநாட்டில் சங்கத்தின் மாநிலத் தலைவர் த.புண்ணியமூர்த்தி வரவேற்றார். பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். மாநாட்டில் உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் பேசும்போது, ‘‘இங்குள்ள விவசாயிகளின் கால் நூற்றாண்டு கோரிக்கைகளை ஏற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்துள்ளார்’’என்றார்.
மாநாட்டில், கீழ்ப்பகுதி பாசன விவசாயிகளின் உரிமையை பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆண்டுதோறும் ஜூன் இறுதிக்குள் குறுவை சாகுபடிக்கு காவிரி தண்ணீர் பெற்று வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.
மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து, ராசி மணலில்அணை கட்ட தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும். காவிரியில் கீழ்ப்பாசன விவசாயிகளின் கருத்தை கேட்காமல் சரபங்கா உள்ளிட்ட உபரிநீர் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து அவசர சட்டம் இயற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், ‘வேளாண் வளர்ச்சி, உரிமைகள் மீட்பில் ஊடகங்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர்கள் கார்த்திகை செல்வன், தேவதாசன், ‘வேளாண்மையில் பெண்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் காரைக்கால் எம்.உமா மகேஸ்வரி, சென்னை டி.சுதா, உதவிப் பேராசிரியை இந்திரா காந்தி, ‘வேளாண்மையின் வீழ்ச்சியும், பொருளாதார பின்னடைவும்’ என்ற தலைப்பில் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் பேசினர்.
மாநாட்டில் மாவட்ட உதவி ஆட்சியர் கமல்கிஷோர், வேளாண்துறை விரிவாக்க கல்வி இயக்கஇயக்குநர் மு.ஜவஹர்லால், தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன், சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர்என்.காமகோடி, மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன், மேற்கு தொடர்ச்சி மலைவள மீட்புக் குழு ஓசை காளிதாஸ், பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. துணைவேந்தர் நீ.குமார்பேசும்போது, ‘‘முதல்வர் அறிவித்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், உவர் மண் அதிகம் உள்ளநாகை மாவட்டம் வண்டுவாஞ்சேரியில் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment