Published : 11 May 2014 02:10 PM
Last Updated : 11 May 2014 02:10 PM
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஜல்லிக்கட்டு" விளையாட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிராணிகள் நல அமைப்புகள் தொடrந்த வழக்கில், விலங்குகளைத் துன்புறுத்த முடியாது. எனவே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்துள்ளது.
தமிழர்களின் நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க பண்பாட்டின் அடையாளமாகவே வீர விளையாட்டுகள் போற்றப்பட்டு வருகின்றன. வீரமும் காதலும் தமிழர் பண்பாட்டின் இரு கண்களாகும்.
அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரால் குறிக்கப்படும் வீர விளையாட்டு, எருதுகளோடு வீரங்காட்டி விளையாடி அவற்றை அரவணைத்துக் காத்தல் என்ற பொருளை உள்ளடக்கியதாகும்.
தமிழகத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் உருவான ஜல்லிக்கட்டுப் போட்டி, ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் எருதுச் சண்டை போன்றது அல்ல. இங்கு வீர விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த விளையாட்டில் மனிதனுக்கோ, காளைக்கோ மரணம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் நிறுவனச் சட்டம் 1948-ல் கலாச்சாரம் மற்றும் சமூக உரிமையைத் தொடர்ந்து பராமரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் விழாக் குழுவினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளையும் உணர்வுகளையும் மதித்தும்; ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்படும் தடையினால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு விளைவுகளை எண்ணிப் பார்த்தும்; தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகள் கேரளாவுக்கு அடிமாடுகளாக அனுப்பப்படும்
அபாயத்தைத் தவிர்த்திடும் நோக்கத்தோடும்; தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் அடையாளத்தைக் காப்பாற்றுவதற்காகவும்; தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கான அனுமதியினைப் பெற வேண்டும்". இவ்வாறு கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT