Published : 08 Mar 2020 01:55 PM
Last Updated : 08 Mar 2020 01:55 PM
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க அனைத்து அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் பங்களிப்பை செலுத்தி மக்களின் உடல் நலன் காக்க உதவிக்கரமாக இருக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால் அதிலிருந்து தமிழக மக்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புக்காக தமிழக சுகாதாரத்துறை ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. அதாவது தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் கொரோனா வைரஸின் தீவிரம், அதை தடுக்கும் வழி முறைகள், மருத்துவமனைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அது மட்டுமல்ல அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இதற்காக தனியாக வார்டுகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
குறிப்பாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பயனுள்ள முயற்சியாகும். எனவே தமிழக மக்கள் அனைவரும் அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வதோடு பொது இடங்களிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தமிழக அரசு – கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பதையும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதையும் த.மா.கா சார்பில் வரவேற்று பாராட்டுகிறேன்.
எனவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆளும் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அனைத்து அரசியல் அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், தனியாரும் அவரவர் பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களின் உடல் நலன் காக்க உதவிக்கரமாக இருக்க வேண்டும்.
என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT