Published : 08 Mar 2020 12:52 PM
Last Updated : 08 Mar 2020 12:52 PM
திண்டுக்கல் அருகே நந்தவனப் பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி உஷா. இவர் எழுவனம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக எழுவனம்பட்டி செல்ல திண்டுக்கல்லில் இருந்து குமுளி செல்லும் அரசு பஸ்ஸில் நேற்று குழந்தையுடன் பயணித்தார். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சென்றபோது, உஷாவின் குழந்தை பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழ இருந்தது. உடனே சுதாரித்த உஷா தனது குழந்தையை காப்பாற்றினார்.
சீட்டுக்கு கீழே பஸ்ஸின் தரைப் பகுதியில் இருந்த பெரிய துளை தற்காலிகமாக சிறிய தகரத்தால் மூடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உஷா, ஓட்டுநர், நடத்துநரிடம் முறையிட்டார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பின்னர் வத்தலகுண்டு நகரை பேருந்து அடைந்தது. அங்கு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் புகழேந்தியிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து அதிருப்தி அடைந்த உஷா பேருந்து முன் குழந்தையுடன் தனியாக தர்ணா செய்தார். இதையடுத்து பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் சென்று துளையை அடைத்தனர். மாவட்டத்தில் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னரே இயக்க வேண்டும் என்பதை அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வலியுறுத்திய உஷா, அறிக்கை வெளியான பின்னரே புறப்பட்டார். உஷாவை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போக்குவரத்துக் கழகத்தின் அலட்சியத்துக்கு இந்தச் சம்பவமே உதாரணம் என்றார். இதுகுறித்து கிளை மேலாளர் புகழேந்தியை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் அழைப்பு ஏற்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT