Published : 08 Mar 2020 12:36 PM
Last Updated : 08 Mar 2020 12:36 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால் இடைத்தரகர்கள், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையை மாற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
விவசாயிகளிடம் குறைந்தபட்ச ஆதார விலையை விடக் குறைவாக வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மாவட்டத்திலுள்ள வட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசானப் பருவத்தில் 39,751 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றுள்ளதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 34,283 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி நடைபெற்றிருந்தது. பருவமழை போதிய அளவுக்கு பெய்து நீர் நிலைகளில் திருப்திகரமாக தண்ணீர் இருந்ததால் இலக்கை மிஞ்சி சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போதிய அளவுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்பதால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை இடைத்தரகர்கள் மூலம் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இது தொடர்பாக விவசாயிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தேவையான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுடன் நடமாடும் நெல் கொள்முதல்நிலையங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
போதிய அளவு திறக்கவில்லை
மொத்தம் 48 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறைகள் தெரிவித்தாலும், போதிய அளவுக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் விவசாயிகள் தனியாரிடமே நெல்லை விற்பனை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியை சுற்றியுள்ள திம்மராஜபுரம், அருகன்குளம், ராஜவல்லிபுரம், கீழநத்தம், கக்கன்நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்குமேல் அதிசயப் பொன்னி, அம்பை- 16, 51 என பல்வேறு ரகங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை என்பதால் தனியாரிடம் குறைந்தவிலைக்கு விவசாயிகள் விற்கிறார்கள் என்று விவசாயி மணிகண்டன் தெரிவித்தார்.
குறைந்த விலைக்கு கொள்முதல்
அரசு நிர்ணயித்துள்ள விலைப்படி சன்ன ரகத்துக்கு கிலோவுக்கு 19 ரூபாய் 5 காசுகளும், மோட்டா ரகத்துக்கு கிலோவுக்கு 18 ரூபாய் 55 காசுகளும் வழங்கப்பட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த விலை கொடுக்கப்படும் நிலையில் இதைவிட குறைவான விலைக்கே தனியார் கொள்முதல் செய்கின்றனர்.
80 கிலோ நெல்லை எடைபோடும்போது 5 கிலோ குறைத்து 75 கிலோவாக கணக்கிட்டு எடை மோசடியும் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரையில் இழப்பு ஏற்படுவதாக விவசாய பிரதிநிதி கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருநெல்வேலி மாவட்ட செயலாளர் பி. பெரும்படையார் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் தரகர்களும், வியாபாரிகளும் குறைந்த விலைக்கு நெல்லை வாங்குவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். எனவே, மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஒன்றியத்துக்கு 3 என்ற கணக்கில் திறந்தால் விவசாயிகளுக்கு பலனளிக்கும்.
மேலும், இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களாக மாற்ற வேண்டும். இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு வருவதற்கும், நெல்லை அடைக்கும் சாக்குப் பைகளுக்கும் கட்டணம் வசூலிப்பதும் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT