Published : 08 Mar 2020 09:54 AM
Last Updated : 08 Mar 2020 09:54 AM

இன்று உலக மகளிர் தினம்: கேரள அஞ்சல்துறை தலைவராக உயர்ந்த தமிழ் பெண்மணி - மகளிர் மட்டுமே பணிபுரியும் 23 தபால் நிலையங்களை உருவாக்கி சாதனை

நிகழ்ச்சி ஒன்றில் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் சாரதா சம்பத்.

மதுரை

பெண்கள் இன்று அரசியல், விஞ்ஞானம், காவல், ராணுவம் போன்ற அதிகாரமிக்க துறைகளிலும் தடைகளைக் கடந்து சாதித்து வருகின்றனர். அத்தகைய பெண்களை கொண்டாடவும், மகளிருக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் நாளாகவும் உலக மகளிர் தினம்மார்ச் 8 (இன்று) கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் பல்வேறு தடைகளைத் தாண்டி அஞ்சல் துறையில் சாதித்து இருக்கிறார், கேரள அஞ்சல் துறை தலைவராக பதவி வகிக்கும் சாரதா சம்பத். தமிழகத்தைச் சேர்ந்த இவர், 2016 முதல் 2017-ம் ஆண்டு வரை கோவை மேற்கு மண்டலத்தில் அஞ்சல் துறை தலைவராகவும், மதுரையை கூடுதல் பொறுப்பாகவும் கவனித்துவந்தார். அப்போது, இவர் அஞ்சல்துறையின் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை (சுகன்யா சம்ருதி யோஜனா) தமிழகத்தில் பிரபலப்படுத்தியதோடு, அந்தத் திட்டத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்றார்.

கோவை ஆனைகட்டி மலைக்கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 71 பெண் குழந்தைகளை செல்வ மகள் திட்டத்தில் சேர்த்தார். தபால் துறை ஊழியர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் இந்தக் குழந்தைகளுக்கு முதல் தவணைத் தொகை ரூ.500 கட்டி, இந்தத் திட்டத்தில் மலைக்கிராம குழந்தைகள் பயன்பெறச் செய்தார்.

தற்போது கேரளா அஞ்சல்துறை தலைவராக அம்மாநிலத்தில் 23 இடங்களில் மகளிர் மட்டும்பணிபுரியும் அஞ்சல் நிலையங்களை உருவாக்கி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். கேரள மாநில அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் தற்போது 65 சதவீதம் பெண்களே பணிபுரிகிறார்கள். இவரது கணவர் சம்பத், சமீபத்தில்தான் தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவராக ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாரதா சம்பத் கூறும்போது, ‘‘எனது பூர்வீகம் ரங்கம். சென்னையில் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தை மேற்கு வங்காளத்தில் உள்ள ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்ததால் குடும்பத்துடன் அங்கு சென்றோம். பிளஸ் 2 வரை அங்குதான் படித்தேன். அதன்பிறகு சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பிஏ சமூகவியல், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் எம்ஏ, எம்ஃபில் படித்துவிட்டு கனடாவில் சிறிதுகாலம் பத்திரிகையாளராக பணிபுரிந்தேன்.

அதன்பிறகு இந்தியா திரும்பி பள்ளி ஆசிரியராக சிறிது காலம்பணிபுரிந்துவிட்டு சிவில் சர்வீஸ்தேர்வெழுதினேன். அதில் வெற்றிபெற்று அஞ்சல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 1988-ம் ஆண்டு ஜனவரியில் மங்களூருவில் எஸ்எஸ்பியாக பணியில் சேர்ந்தேன். அதன்பிறகு பெங்களூருவிலும், தொடர்ந்து மைசூரில் அஞ்சல் துறை பயிற்சி மையத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்தேன். அந்த வேலைபுதிய அனுபவத்தை தந்தது.

பதவியும் அதிகாரமும்...

அங்கு பணிபுரிந்தபோது நான் உருவாக்கிய பயிற்சிகள்தான், தற்போது அஞ்சல் துறையில் ‘மேனேஜ்மென்ட் ஆஃப் ட்ரெயினிங்’ முறையாகப் பின்பற்றப்படுகிறது. அதன்பிறகு விஜயவாடா, ஹைதராபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா என இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளேன். பதவியும், அதிகாரமும் நிரந்தரம் இல்லை. அவை நம்மிடம் இருக்கும்வரை அதைக்கொண்டு அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும்.

கேரளாவில் பெண் கல்வி அறிவு அதிகம். அங்கு பெண்கள் தங்கள் உரிமைகளை தெரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் முழுக்க முழுக்க மகளிர் மட்டுமே பணிபுரியும் அஞ்சல் நிலையங்களை உருவாக்க முடிந்தது.

கேரளாவில் 14 மாவட்டங்கள் உள்ளன. இதில் மொத்தம் 23 தபால்துறை டிவிஷன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிஷனுக்கும் ஒரு மகளிர் தபால் நிலையத்தை அமைத்துள்ளோம். இதற்கு கேரளாவில் தற்போது வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எம்ஜிஆரிடம் கடிகாரம் பெற்றவர்

சாரதா சம்பத், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்தபோது, என்சிசியில் சிறந்த ‘கேடட்’ ஆக தேர்வு பெற்றார். அவர் படித்தகாலத்தில் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் சாரதா சம்பத்தை பாராட்டி கைக்கடிகாரம் பரிசளித்துள்ளார். அந்த கடிகாரத்தை அவர் இன்றும் வைத்துள்ளார். தான் பணிபுரிந்த மாநிலங்களில் உள்ள மலைக் கிராமப்பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்கித்தருவது, வசதியில்லாத குழந்தைகளை படிக்க வைப்பது என பல்வேறு உதவிகளை செய்கிறார்.

ஓய்வுக்குப் பிறகு பெண் குழந்தைகள் கல்வி, பாதுகாப்பு நலனில் அக்கறை காட்டும் சமூகப் பணிகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். ஒரு பெண் கல்வி கற்றால் அந்த தலைமுறையை சிறக்கும் என்பார்கள். அதற்கு சாரதா சம்பத்தே சாட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x