Published : 07 Mar 2020 09:29 PM
Last Updated : 07 Mar 2020 09:29 PM
மதுரை அருகே முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களால் நடத்தப்பட்ட பிரியாணி திருவிழாவில் 150 கிடாய், 600 கோழிகளை பலியிட்டு தயாரிக்கப்பட்ட பிரியாணி பிரசாதம் பல ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.
5 மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரம் ஓட்டல் உரிமையாளர்கள் இணைந்து இவ்விழாவை கொண்டாடினர்.
மதுரை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, செலுங்கானா, புதுச்சேரியில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் காவல் தெய்வமான முனியாண்டி கோயில் வடக்கம்பட்டியில் உள்ளது. இங்கு பிரியாணி திருவிழாவை ஆண்டுதோறும் நாயுடு மற்றும் ரெட்டியார் சமூகத்தினர் தனித்தனியாக கொண்டாடுகின்றனர்.
நேற்று இரவு ரெட்டியார் சமூகத்தினர் விழா கொண்டாடினர். இதற்காக 5 மாநிலங்களிலும் ஓட்டல் நடத்திவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வடக்கம்பட்டியில் குவிந்தனர்.
நேற்று காலை சுவாமிக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தனர். மாலையில், மேளதாளத்துடன் ஏராளமான பெண்கள் பூந்தட்டு, மாலையுடன் ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்தனர்.
இரவு முழுக்க சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 150 கிடாய், 600 சேவல்கள் பலியிடப்பட்டன.
இறைச்சியை 2,500 கிலோ அரிசியை பயன்படுத்தி பிரியாணி தயாரிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு சமையல் கலைஞர்களைக் கொண்டு 50-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் விடிய,விடிய பிரியாணி தயாரானது.
இந்த பிரியாணியை முனியாண்டி சுவாமிக்கு படையல் செய்து அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் ஓட்டல் உரிமையாளர்கள், ஆடு, கோழி வழங்கியவர்கள், நன்கொடையாளர்கள் என பல ஆயிரம் பேருக்கு தூக்குவாளி, பெட்டிகளில் பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டன.
அத்துடன் பக்தர்களுக்கும் பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது. வடக்கம்பட்டியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பிரியாணி பிரசாதம் வாங்கிச் சென்றனர். பல ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணியை பெற்றுச் சென்றனர்.
இது குறித்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில், காரைக்குடியில் முனியாண்டி விலாஸ் என சுவாமியின் பெயரில் ஓட்டல் 1937-ம் ஆண்டு வடக்கம்பட்டியைச் சேர்ந்த குருசாமியும், இதன் பின்னர் ராமு என்பவர் கள்ளிக்குடியிலும் துவக்கினர். தற்போது 1,500-க்கும் அதிக ஓட்டல்கள் முனியாண்டி சுவாமி பெயரில் செயல்படுகிறது.
இந்த ஓட்டலுக்கு வரும் முதல் வாடிக்கையாளர் வழங்கும் பணம் அல்லது லாபத்தின் ஒருபகுதியை உண்டியலில் ஓராண்டிற்கு சேகரித்து முனியாண்டி சுவாமி பூஜைக்கு வழங்குவதை ஓட்டல் உரிமையாளர்கள் ஐதீகமாக கடைப்பிடிக்கின்றனர்.
மேலும், சுத்தமான ஆட்டுக்கறியைத் தவிர வேறு எதையும் பயன்படுத்துவதில்லை என்பதை முனியாண்டி மீது சத்தியமாக ஏற்று செயல்படுகிறோம்.
இதனால் முனியாண்டி விலாஸ் ஓட்டல் என்றாலே பிரியாணி, அசைவ உணவு வகைககளை நம்பி சாப்பிடலாம் என்ற நம்பிக்கையை பல லட்சம் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளோம்.
தொழில் துரோகத்தில் ஈடுபட்ட மாட்டோம் என முனியாண்டி சுவாமியிடம் சத்தியம் பெற்றே ஓட்டல் துவங்குகிறோம்.
பசியோடு வருபவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு உணவு வழங்குவது பாவம் என்றும், இதை போக்கிக்கொள்ளவே வாடிக்கையாளர் பணத்திலிருந்தே முனியாண்டிக்கு பிரியாணி படைத்து வழிபடுகிறோம் என்பதும் சிலரின் நம்பிக்கையாக உள்ளது.
ஆண்டுக்காண்டு விழா கூடுதல் சிறப்புடன்தான் விழா நடக்கிறது. முனியாண்டி சுவாமியின் தாய் கிராமம் வடக்கம்பட்டி.
இங்கிருந்து மண் எடுத்துச்சென்று அச்சம்பட்டி, கோபாலபுரம், புதுப்பட்டி, செங்கப்படை என பல கிராமங்களில் முனியாண்டி கோயில் கட்டி தனித்தனியாக விழா நடத்துகின்றனர். இதனால் முனியாண்டியின் அருளாசி அனைவருக்கும் சென்றடைகிறது’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...