Published : 07 Mar 2020 07:56 PM
Last Updated : 07 Mar 2020 07:56 PM
பள்ளியில் பெண் ஆய்வாளர் கற்றுக்கொடுத்த தற்காப்பு கலையால் கத்தியால் தாக்க முயன்ற இளைஞரை தாக்கி தப்பித்த சிறுமி, அவருக்கு கற்றுக்கொடுத்த பெண் ஆய்வாளர் இருவரையும் நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி அளித்தார்.
சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த 13 வயது சிறுமி மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அமைந்தகரையைச் சேர்ந்த நித்யானந்தம்(26) என்பவர் சிறுமியை காதலிக்குமாறு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி கடந்த 04-ம் தேதி அன்று வழக்கம்போல் மதியம் பள்ளி விட்டப்பின் அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது, நித்யானந்தம் அந்தச்சிறுமியை வழிமறித்து காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தி கட்டாயபடுத்தியுள்ளார். இதை சிறுமி மறுக்கவே, நித்யானந்தம் திடீரென தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் சிறுமியை தாக்க முயன்றுள்ளார்.
உடனே, சிறுமி தான் படிக்கும் பள்ளியில் கடந்த மாதம் அண்ணாநகர் மகளிர் காவல் ஆய்வாளர் எம்.தனலஷ்மி கற்றுக் கொடுத்த அவசர நேரங்களில் தற்காத்துக் கொள்ளும் யோசனைகள் மற்றும் சில கலைகளின்படி, சத்தம் போட்டுக் கொண்டே நித்யானந்தத்தை தடுத்து தாக்க முற்பட்டுள்ளார். இதனால் நித்தியானந்தம் பயந்துபோனார். அந்த தாக்குதல் முயற்சியில் கத்தி சிறுமியின் கழுத்தின் அருகில் பட்டு காயம் ஏற்பட்டது.
உடனே நித்யானந்தம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாக்குதல் மற்றும் வழிமறித்து மிரட்டல் சம்பந்தமாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து கொலை முயற்சி மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த நித்யானந்தத்தை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
விசாரணையில், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் எம்.தனலஷ்மி அண்ணாநகர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுமார் 10 பெண்கள் பள்ளிகளுக்கு சென்று, மாணவிகளுக்கு அவசர நேரத்தில் தற்காத்துக் கொள்ளவும், ஆபத்து நேரங்களில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும் தற்காப்பு கலைகள் மற்றும் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தி வருகிறார்.
இதனை பயிற்சி எடுத்துக் கொண்டு சிறுமி, எதிரி நித்யானந்தம் கத்தியால் தாக்க வந்தபோது, ஆய்வாளரின் யோசனையின்படி செயல்பட்டதால், உயிர் பிழைத்ததாக தெரிவித்தார். சமயோசிதமாக செயல்பட்டு தற்காத்துக்கொண்ட பள்ளி மாணவி மற்றும் தற்காப்பு பற்றி சிறப்பு வகுப்பு எடுத்த அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தனலஷ்மி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன், இன்று (07.3.2020) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் காயமடைந்த மாணவியின் உடல் நலம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT