Published : 31 Jul 2015 02:33 PM
Last Updated : 31 Jul 2015 02:33 PM

மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த காந்தியவாதி சசிபெருமாள் மரணம்: செல்போன் கோபுரத்தில் ஏறி போராடியபோது பரிதாபம்

டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட காந்தியவாதி சசிபெருமாள், செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தியபோது மரணமடைந்தார். அவருக்கு வயது 59.

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகே பள்ளி, கல்லூரி, ஆலயங்கள் அமைந்திருப்பதால், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தனர். இருந்தும் கடை அகற்றப்படவில்லை.

இதையடுத்து கடையை அகற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, உண்ணாமலைக்கடை டாஸ்மாக் கடையை அகற்ற 2014 பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் இந்த கடை தொடர்ந்து இயங்கிவந்தது.

கடந்த மாதம் உண்ணா மலைக்கடை சந்திப்பில் 2 நாள் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. அதிலும் சசி பெருமாள் கலந்து கொண்டார். இவர்களது போராட்டம் வெள்ளிக்கிழமை 1,031-வது நாளை எட்டியது. வெள்ளிக்கிழமை சசிபெருமாளும், உண்ணாமலைக் கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலனும் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். திடீரென காலை 8 மணிக்கு இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.

சசி பெருமாள், டவரில் இருந்து கீழே விழுந்து விடாமல் இருக்க உடம்போடு இணைத்து கயிறு கட்டியிருந்தார். போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தக்கலை டிஎஸ்பி விக்ராந்த் பாட்டீல், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும்அங்கு வந்தனர். டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 7 நாட்களில் அந்த கடை அகற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

தொடர்ந்து உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலன் கோபுரத்தில் இருந்து இறங்கினார். ஆனால் சசிபெருமாள் இறங்கவில்லை. கோபுரத்திலேயே அவரது தலை தொங்கியபடி கிடந்தது. மதியம் 1.20 மணிக்கு குழித்துறை தீயணைப்பு நிலைய போலீஸார், மேலே ஏறி சசிபெருமாளை மீட்டு, கீழே கொண்டுவந்தனர். அவரது உடலில் கயிறு கட்டப்பட்டிருந்த பகுதிகளில் ரத்தம் கசிந்திருந்தது.

ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக செல்போன் டவரில் இருந்ததால் அவர் மயங்கிய நிலையில் இருந்தார். சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சசிபெருமாள் நோக்கம் சொல்லும் கருத்து:

சில மாதங்களுக்கு முன்பு 'தி இந்து'வுக்கு சசிபெருமாள் அளித்த பேட்டி ஒன்றில் பூரண மதுவிலக்கு குறித்து சுருக்கமாக கூறியது, அவரது நோக்கத்தின் தன்மையை வெளிப்படுத்தும். அதன் முக்கிய அம்சம் இதுதான்:

"சரித்திரப் பெருமை வாய்ந்த தமிழகத்தை, 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, சாராய முதலாளிகள் ஆண்டு வருகிறார்கள். அப்படி ஒரு கரும்புள்ளி வரலாறாக, தமிழகத்தை மாற்றிவிட்டார்கள். சாராய சாம்ராஜ்யத்தை நடத்த, சட்டமன்றத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். அடுத்தவர் காய்ச்சினால் கள்ளச்சாராயம்; அரசே காய்ச்சினால் நல்ல சாராயம் என்று விற்கிறார்கள். இதனால், இலங்கையில் இனப் படுகொலை நடந்ததுபோல், தினமும் தமிழகத்தில் சாராயப் படுகொலைகள் நடந்து வருகின்றன. சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு மக்கள், மாணவர்கள், தாய்மார்கள் என அனைவரும் போராட களம் இறங்கியுள்ளார்கள். இது 2-வது சுதந்திரப் போராட்டமாக மாறியுள்ளது."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x