Published : 07 Mar 2020 03:47 PM
Last Updated : 07 Mar 2020 03:47 PM
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இதில் அடிக்கல் நாட்டிவிட்டு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, "பல்வேறு எதிர்ப்புகளை சமாளித்து தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மயிலாடுதுறை வட்டத்தில் 72 லட்ச ரூபாய் செலவில், ஒரு நூலகம் அமைக்கப்படும். வேதாரண்யம் ஏரியில் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்படும்.
வேதாரண்யம் வட்டம் கைலாசப்பட்டி கிராமத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.49 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட அகஸ்தியன்பள்ளி கிராமங்களில் 29.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குக் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும். சீர்காழி வட்டம், திருமுல்லைவாசல் கிராமத்தில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர் கட்டிக் கொடுக்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரிசி சார்ந்த உணவுப் பொருட்கள் மற்றும் கடல்வாழ் உணவுகளின் பதப்படுத்தும் தொகுப்பு அமைக்கப்படும்.
மயிலாடுதுறையை தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டமாக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது" என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT