Published : 07 Mar 2020 01:14 PM
Last Updated : 07 Mar 2020 01:14 PM
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மறைவு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 7) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திமுகவின் மூத்த முன்னோடியும், கட்சியின் பொதுச் செயலாளருமான க.அன்பழகன் இன்று அதிகாலையில் மறைந்தார் என்ற துயரச் செய்தி கிடைத்தது.
கடந்த சில மாதங்களாக க.அன்பழகனின் உடல்நிலை பலவீனப்பட்டிருந்தாலும், அவர் பரிபூரண குணமடைந்து திரும்புவார் என எதிர்பார்த்தோம். சுயமரியாதை சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட க.அன்பழகன், சிறுவயது முதலே திராவிட இயக்கத்தில் அமைப்புரீதியான பொது வாழ்வை மேற்கொண்டவர். அண்ணாமலைப் பல்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக, சட்டப்பேரவை முன்னவராக, அமைச்சராகப் பணிபுரிந்தவர். திமுகவின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றி வந்தவர்.
தமிழர் வாழ்வு, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு எனப் பல்வேறு துறைகளை ஆழ்ந்து கற்று, பல படைப்புகளைத் தந்துள்ளவர். மறைந்த தலைவர் கருணாநிதியுடன் மாறாத நட்பு கொண்டவர். சமூக நீதி சார்ந்த ஜனநாயக நெறி சார்ந்து வாழ்ந்தவர்.
வகுப்புவாத சக்திகளை எதிர்த்து நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் திராவிட இயக்கத்தின் கருத்துக் கருவூலமான க.அன்பழகனின் மறைவு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இருப்பினும் அவரது வாழ்வும், பணியும் நமது போராட்டத்தை வழிநடத்த உதவிடும் என நம்புகிறோம்.
பேராசிரியர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திமுக தலைவர் உள்ளிட்ட அக்கட்சி நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறது" என இரா.முத்தரசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT