Published : 07 Mar 2020 10:42 AM
Last Updated : 07 Mar 2020 10:42 AM
மதுரை மாநகராட்சியில் 9 ஆண்டுகளாக நிலவி வந்த வரி குளறுபடிக்குத் தீர்வு காணும் வகையில் விரிவாக்கப் பகுதியின் 28 வார்டுகளில் உள்ள ‘ஏ’, ‘பி’ கட்டிடங்கள் அனைத்தும் ‘டி’ பிரிவுக்கு மாற்ற மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 158 கட்டிடங்கள் உள்ளன. இதில், 36 ஆயிரம் வணிக ரீதியான கட்டிடங்கள் உள்ளன. மீதமுள்ளவை குடியிருப்புகள். இந்த கட்டிடங்கள் மீதான சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ரூ.97 கோடி வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் வரி நிர்ணயம் செய்ததில் குளறுபடிகள் உள்ளதாகவும், அதற்கு தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரச்சினையால் அப்பகுதியைச் சேர்ந்த பலர் வரி கட்டாமல் உள்ளனர்.
இதையடுத்து, வரி பாக்கி வைத்துள்ளவர்களிடம் வரியை வசூலிக்கவும், விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் வரியை சீரமைக்கவும் 5 பேர் கொண்ட கமிட்டியை மாநகராட்சி நிர்வாகம் அமைத்தது. அந்த கமிட்டி ஆய்வு செய்து, விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் 9 ஆண்டுகளாக நிலவி வந்த வரி குளறுபடிகளை மறுசீராய்வு செய்து தீர்வு கண்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
முன்பு மாநகராட்சியில் 72 வார்டுகள் மட்டுமே இருந்தன. 2011-ம் ஆண்டில் மாநகராட்சியுடன் அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளைச் சேர்ந்த 28 வார்டுகள் இணைக்கப்பட்டு, மாநகராட்சி வார்டுகள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டன.
புதிதாக சேர்க்கப்பட்ட 28 விரிவாக்க வார்டுகளில் வில்லாபுரம், அருப்புக்கோட்டை ரோடு, கருப்பாயூரணி ரோடு, மேலூர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் ‘ஏ’ பிரிவிலும், நத்தம் சாலை உட்பட பல பகுதிகள் ‘பி’ பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டன. ‘சி’ மற்றம் ‘டி’ பிரிவில் எந்த வீடுகளும் சேர்க்கப்படவில்லை.
‘ஏ’ பிரிவில் ஒரு சதுர அடிக்கு ரூ.3, ‘பி’ பிரிவுக்கு ரூ.2, ‘சி’ பிரிவுக்கு ரூ.1, ‘டி’ பிரிவில் 70 பைசா சொத்து வரி நிர் ணயம் செய் யப்பட்டது. அதனால், விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு 1000 சதுர அடி வீடுகளுக்கு சொத்து வரி பாதாளச் சாக்கடை வரி, குப்பை வரி சேர்த்து 6 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.4 ஆயிரம் வரை கட்ட வேண்டியுள்ளது.
ஆனால், அதே அளவு வீடு களுக்கு பழைய 72 வார்டுகளில் ரூ.850 மட்டுமே சொத்து வரி கட்ட வேண்டியுள்ளது. பழைய 72 வார்டுகளுக்கும், விரிவாக்கம் செய்யப்பட்ட 28 வார்டுகளுக்கும் சொத்து வரி நிர்ணயத்தில் அதிக அளவு வித்தியாசம் உள்ளது. இதையடுத்து, 28 வார்டுகளை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வரியை கட்டாமல் உள்ளனர். இந்த குளறுபடியால் மாநகராட்சி மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டில் மாநராட்சியுடன் விரிவாக்கப் பகுதி வார்டுகளை சேர்த்தபோது பாதாளச் சாக்கடை, சாலை, தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதிகளை செய்து கொடுத்த பின்னரே சொத்துவரி அதிகரிக்கப்படும். அதுவரை இப்பகுதியில் ‘டி’ பிரிவு அடிப்படையில் சொத்து வரி வசூல் செய்யப்படும் என்று மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அந்த தீர்மானத்தை மீறி எந்த வசதிகளையும் செய்து கொடுக் காமல் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி வீடுகளை, ‘ஏ’, ‘பி’ பிரிவில் சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாக சென்னை, கோவை மாநகராட்சிகளை ஒப்பிடும்போது மதுரை மாநகராட்சியின் வரிவிகிதம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மாநகராட்சி அமைத்த கமிட்டி, இந்த குளறுபடிகளை சீராய்வு செய்து விரிவாக்கப் பகுதியின் 28 வார்டுகளில் உள்ள வீடுகளை ‘டி’ பிரிவுக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த மாற்றத்துக்கு ஓரிரு நாளில் தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க உள்ளது. அந்த உத்தரவு வந்ததும், விரிவாக்கப் பகுதி வீடுகள் ‘டி’ பிரிவுக்கு மாற்றப்படும். இதன் மூலம் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 60 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT