Published : 07 Mar 2020 07:40 AM
Last Updated : 07 Mar 2020 07:40 AM
சேலம் அருகே சொகுசு பேருந்தில் இருந்து ரூ.3 கோடி மதிப்பு தங்க நகையை கொள்ளையடித்த சம்பவத்தில், வியாபாரி போல போலீஸார் நாடகமாடி, கொள்ளையர்களிடமிருந்த நகைகளை மீட்டனர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தங்க நகை கடையின் கிளை கோவையில் உள்ளது. கோவை நகை கடைக்கு தேவையான ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை ஹைதராபாத்தில் இருந்து ஊழியர் கவுதம்(25) கடந்த மாதம் 8-ம் தேதி சொகுசு பேருந்தில் கொண்டு வந்தார். சேலம் மாவட்டம் சங்ககிரியில் சொகுசு பேருந்து, ஓட்டல் அருகே நிறுத்தப்பட்டபோது, கவுதம் கொண்டு வந்திருந்த ரூ.3 கோடி தங்கம் வைத்திருந்த பேக்கை காணவில்லை. இதுகுறித்து சங்ககிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் சுங்கச்சாவடி பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ஆம்னி பேருந்தை ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேச பதிவு எண் கொண்ட கார் பின் தொடர்ந்து வந்ததை போலீஸார் கண்டறிந்தனர். அந்த கார் எண்ணை கொண்டு விசாரணை செய்ததில், மத்திய பிரதேசம், தார் மாவட்டத்தில் உள்ள முத்லானிகேர்வா பகுதியைச் சேர்ந்தது என தெரியவந்தது.
மத்திய பிரதேசத்துக்கு கொள்ளையர்களை பிடிக்க காவல் ஆய்வாளர் முத்துசாமி தலைமையில் எஸ்ஐ வெங்கடாசலம் உள்ளிட்ட போலீஸார் சென்று விசாரணை செய்தனர். தங்க நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் முல்தானிகேர்வா பகுதியைச் சேர்ந்த முஸ்தபா, அக்தர், முனீர், அகமதுகான், அஜய் ரத்தோர் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்த தங்க நகையை மீட்க போலீஸார், வியாபாரிகள்போல நாடகமாடி பேரம் பேசி, மத்திய பிரதேசம் பரம்புரி மாவட்டத்தில் உள்ள காளிப்பாவடி என்ற இடத்துக்கு வரவழைத்தனர்.
போலீஸாரை நகை வியாபாரிகள் என்று நம்பி வந்த கொள்ளையர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த நகைகளை காட்டியுள்ளனர். அப்போது, போலீஸார் தங்க நகைகளை ஆய்வு செய்ததில், ஆம்னி பேருந்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது தெரியவந்தது. உடனடியாக கொள்ளை கும்பலை போலீஸார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் நகைகளை போட்டுவிட்டு, காரில் ஏறி தப்பினர். கொள்ளையர்களிடம் இருந்து 592 கிராம் எடை கொண்ட 7 நெக்லஸ், வைரம் மற்றும் பல வண்ண கற்கள் பதித்த 287 கிராம் எடையுள்ள காதணி 14 ஜோடி, வைரம் மற்றும் கற்கள் பதித்த 11 கிராம் எடையுள்ள மோதிரம் என ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை போலீஸார் மீட்டனர். தொடர்ந்து கொள்ளை கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க, வைர நகைகளை மீட்ட கூடுதல் எஸ்பி அன்பு, டிஎஸ்பி தங்கவேல், காவல் ஆய்வாளர் முத்துசாமி, சசிக்குமார், முத்தமிழ் செல்வராசன், எஸ்ஐ-கள் வெங்கடாஜலம், செந்தில்குமார், ஹரி மற்றும் ஏட்டுகள் உள்பட 25 பேர் கொண்ட குழுவை சரக டிஐஜி பிரவீன்குமார், மாவட்ட எஸ்பி தீபா காணிகர் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT