Published : 07 Mar 2020 07:30 AM
Last Updated : 07 Mar 2020 07:30 AM
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் திருவாரூரில் இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது.
திருவாரூர் வன்மீகபுரம் திடலில் மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ள இவ்விழாவுக்கு தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தலைமை வகிக்கிறார். விழாவில் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், விவசாயிகள் சார்பில் பட்டம் ஒன்றும் வழங்கப்பட உள்ளது. பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு முதல்வர் சிறப்புரையாற்றுகிறார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூர் சத்யநாராயணா உட்பட பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல்
மேலும், நாகை மாவட்டம் ஒரத்தூரில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
நாகை ஒன்றியம் ஒரத்தூரில் 60.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.366.85 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு ரூ.123.05 கோடி மதிப்பில் மருத்துவமனை, ரூ.119.03 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, ரூ.124.77 கோடி மதிப்பில் மருத்துவப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் உட்பட 21 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இவற்றில் 6 மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், மருத்துவக் கல்லூரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன் னிலை வகிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment