Last Updated : 06 Mar, 2020 09:30 PM

 

Published : 06 Mar 2020 09:30 PM
Last Updated : 06 Mar 2020 09:30 PM

நெல்லையில் கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தகவல்

திருநெல்வேலி

நெல்லையில் கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருநெல்வேலி அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை, குடல், சிறுநீரக அறுவை சிகிச்சை துறைகள் என்று மொத்தம் 8 துறைகள் செயல்படுகின்றன. இங்கு அனைத்து நவீன உபகரணங்களும் உள்ளன.

கடந்த 6 மாதமாக இங்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்துவகையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இங்குள்ள இருதய அறுவை சிகிச்சை துறையில் திறந்த இருதய அறுவை சிகிச்சைகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் அனைத்து உயர் இருதய அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் முத்து கிருஷ்ணபேரியைச் சேர்ந்த தங்கபெருமாள் (55) என்பவர் நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரொனரி ஆஞ்சியோகிராம் எனப்படும் இருதய ரத்த குழாய் பரிசோதனை மூலம் ரத்த குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் குருதி குழாய் சீரமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அதில் வைக்கப்பட்ட குழல் எனப்படும் ஸ்டென்டில் அடைப்பு ஏற்பட்டதால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இருதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இருதய அறுவை சிகிச்சைத்துறை தலைவர் மற்றும் பேராசிரியர் சஞ்சீவி பாண்டியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதுபோல் திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் ஜெபக்குமார் (58), ராஜபாளையத்தை சேர்ந்த பாலசுந்தரம் (48) ஆகியோருக்கும் பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

மேலும், நாச்சியார்புரத்தை சேர்ந்த கார்மேகம் (32), நாங்குநேரி முத்துமாரி (24), அம்பாசமுத்திரம் சண்முகசெல்வி (31), களக்காடு சுரேஷ் (33), மூலைக்கரைப்பட்டி ஜெயராணி (45) ஆகியோருக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏட்ரியல் செப்டல் டிபெக்ட் (ஏடிஎஸ்) எனப்படும் இருதய பிறவி கோளாறுகளுக்கும், பிறவி ஓட்டை அடைப்பு போன்ற அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் பாளையங்கோட்டை ஆனந்த் (10), குலசேகரப்பட்டினம் முத்துலெட்சுமி (24), கோவில்பட்டி விக்டோரியா (25) ஆகியோர் பயனடைந்துள்ளனர்.

இதுபோன்ற இருதய அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் ரூ.2 முதல் ரூ.6 லட்சம் வரையில் செலவாகும். ஆனால் திருநெல்வேலி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனைத்தும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இருதய அறுவை சிகிச்சைகளுடன் சேர்த்து வீடியோ அசிஸ்டட் தொராசிக் சர்ஜரி எனப்படும் நுண்துளை மூலம் நெஞ்சக அறுவை சிகிச்சைகளும், நுரையீரல் புற்றுநோய், காசநோய் போன்ற நெஞ்சக நோய்களுக்கான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இருதய மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிமம் கேட்கப்பட்டுள்ளது. உரிமம் கிடைத்ததும் வருங்காலத்தில் அத்தகைய சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.

கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் 19 வைரஸ் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வார்டில் நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி வைக்கும் பகுதியில் 12 படுக்கைகளும், வார்டுக்குள் 8 படுக்கை வசதிகளும், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களும் உள்ளன.

24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கவும், கண்காணிப்பு செய்யவும் ஏதுவாக மருத்துவர்கள் குழுவினர் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. யாரும் இங்கு அனுமதிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x