Published : 06 Mar 2020 03:55 PM
Last Updated : 06 Mar 2020 03:55 PM
தலைமைச் செயலகத்தில், காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக 95 கோடியே 58 லட்சத்து 31 ஆயிரத்து 335 ரூபாய் மதிப்பீட்டிலான 2,271 வாகனங்களை வழங்கும் விதத்தில் அடையாளமாக, 41 வாகனங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கடந்த ஜூன் 27 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, ''காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக கழிவு செய்யப்பட்ட 2,601 வாகனங்களுக்குப் பதிலாக 1,340 எண்ணிக்கையிலான பல்வேறு வகையான வாகனங்கள் வாங்கப்படும்" என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்புக்கிணங்க, தமிழக அரசு, காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 510 ஜீப்கள், 20 பேருந்துகள், 100 சிறிய பேருந்துகள், 50 வேன்கள், 50 லாரிகள், 4 தண்ணீர் டேங்கர் லாரிகள், 1,506 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 2,240 வாகனங்களைக் கொள்முதல் செய்திட 91 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரத்து 560 ரூபாய் நிதி ஒப்புதல் அளித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, காவல்துறை கண்காணிப்பாளர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 79 லட்சத்து 44 ஆயிரத்து 775 ரூபாய் செலவில் 31 ஸ்கார்பியோ வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக மொத்தம் 95 கோடியே 58 லட்சத்து 31 ஆயிரத்து 335 ரூபாய் மதிப்பீட்டிலான 2,271 வாகனங்களை வழங்கிடும் வகையில் அடையாளமாக, மோட்டார் சைக்கிள்கள், ஜீப்புகள், வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட 41 வாகனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறை, கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல்துறை கூடுதல் டிஜிபி (தலைமையகம்) சீமா அக்ரவால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT