Published : 06 Mar 2020 01:31 PM
Last Updated : 06 Mar 2020 01:31 PM
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
மாநிலங்களவையில் தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிவித்து, தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டது.
தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13-ம் தேதி. மார்ச் 16-ம் தேதி வேட்பு மனு பரிசீலனையும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் மார்ச் 18 ஆகும்.
தமிழகத்தில் 6 எம்.பி.க்களைத் தேர்வு செய்யலாம் என்கிற நிலையில் திமுக, அதிமுக தலா 3 எம்.பி.க்களைத் தேர்வு செய்யலாம். இதில் போட்டி எதுவும் இல்லை. ஆனால் ஒருவேளை போட்டியிருந்தால் தேர்தல் நடக்கும். அவ்வாறில்லாவிட்டால் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. அவ்வாறு தேர்தல் நடந்தால் வாக்குப்பதிவு மார்ச் 26-ம் தேதி அன்று நடக்கும்.
வாக்குப்பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மாநிலங்களவைக்கு கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுக்கள் மற்றும் பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இன்றிலிருந்து (மார்ச் 6) வரும் 13-ம் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்து கையெழுத்துப் போட்டால் மட்டுமே வேட்புமனு செல்லும்.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகிறார்கள். அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் தேர்தல் மன்னன் பத்மராஜன் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT