Published : 06 Mar 2020 11:14 AM
Last Updated : 06 Mar 2020 11:14 AM
தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று (மார்ச் 6) அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால், எல்லா நாடுகளில் இருந்தும் வரக்கூடிய சர்வதேசப் பயணிகள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம். 65 பேர் அடங்கிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குழுவினர் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தமாக 100 பேர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பரிசோதிக்கும் வார்டுகளும் தயாராக உள்ளன. தேவையான மருத்துவ உபகரணங்களும் உள்ளன. இதற்கென தனி ஆம்புலன்ஸ் தயாராக வைத்துள்ளோம். இந்த ஆம்புலன்ஸை ஒருமுறை பயன்படுத்தி விட்டால் மறுமுறை முழுமையாக நோய்க்கிருமிகளை ஒழித்து, ஸ்வாப் சோதனை செய்தால் மட்டுமே மீண்டும் பயன்படுத்த முடியும்.
கரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் மூலமாக கடுமையான அறிவுறுத்தல்கள் சொல்லப்பட்டுள்ளன. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது ஆட்சியர்களுக்குத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வூஹான் மாகாணத்தில் கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து தமிழகத்தில் கடுமையாகக் கண்காணித்து வருகிறோம். இதனைத் தடுக்கக் கைகளை அடிக்கடி கழுவுவது மிகவும் முக்கியம். இருமல், தும்மல் மூலம் ஏற்படும் நீர்த்திவலைகள் பரவுவதால் இந்தத் தொற்று ஏற்படுவது 20 சதவீதமாக உள்ளது. மீதம் 80%, தொற்று ஏற்பட்டுள்ள இடங்களைத் தொடுவதன் மூலம்தான் பரவுகிறது.
இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், ஆகியவைதான் இதன் 3 முக்கிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
இதுவரை சென்னை விமான நிலையத்தில் 1 லட்சத்து 111 பேரை பரிசோதனை செய்திருக்கிறோம். இவர்களில் 1,643 பேரை நாங்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். அவரவர் வீடுகளிலேயே அவர்களை 28 நாட்கள் கண்காணிக்கிறோம்.
இதுவரை தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கிட்டத்தட்ட 54 பேரின் ரத்த மாதிரிகளைச் சோதனை செய்துள்ளோம். அவர்கள் அனைவருக்கும் 'நெகட்டிவ்' என்றுதான் முடிவுகள் வந்துள்ளன. பொதுமக்கள் இதனால் பதற்றம் அடைய வேண்டாம். நோய் குறித்த பயம் வேண்டாம். அதேநேரத்தில் நாம் கவனக்குறைவாக இருக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
சீனாவில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் 100 பேர் என்று வைத்துக்கொண்டால் அவர்களில் இறப்பு விகிதம் 2 சதவீதமாக இருக்கிறது. சீனா தவிர்த்த மற்ற நாடுகளில் இறப்பு விகிதம் 0.2 சதவீதமாக இருக்கிறது என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. அதனால், பதற்றம் வேண்டாம். வீண் வதந்திகளை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். தமிழக சுகாதாரத் துறை இதுகுறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிடுகிறோம். வெளிப்படையாக பதில் சொல்கிறோம். அரசு சொல்வதை, நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
கேரளாவில் இப்போது கரோனா பாதிப்பு இல்லையென்றாலும் எல்லைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில்வே நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனி வார்டுகள் அமைக்க வேண்டும் என தனியார் மருத்துவமனைகளை அறிவுறுத்தியிருக்கிறோம். அவர்களும் அதற்காக முன்வந்துள்ளனர்.
காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமலுக்கான சிகிச்சைகளைக் கொடுத்து ஒரு நோயாளியை டிஸ்சார்ஜ் செய்துவிடலாம். அதற்கான அத்தனை மருந்துகள், ஆன்டிபயாட்டிக்குகள், பாரசிட்டமால் உள்ளிட்டவை தேவையான அளவு உள்ளன. எண்-95 முகக்கவசங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளன. மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 300 தனிப் படுக்கைகள் உள்ளன. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெப்பமான பகுதிகளில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருக்காது என்ற செய்தி ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால், சார்ஸ் வைரஸின் தாக்கத்தைவிட இதன் வீரியம் குறைவாக இருக்கிறது.
கட்டுப்படுத்தாத மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாளத நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயாளிகளுக்குக் கரோனா வைரஸ் ஏற்படும்போது கவனிக்காமல் இருந்தால் தான் இறப்பு ஏற்படும். மக்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT