Published : 06 Mar 2020 08:29 AM
Last Updated : 06 Mar 2020 08:29 AM
சீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் திட்டமிட்டேபூனை அனுப்பப்பட்டுள்ளது என்றுசென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் அந்த பூனை சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
சீனாவில் ‘கோவிட்-19’ வைரஸ் காய்ச்சல் பரவிவருவதால், அங்கிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விமானநிலையங்கள், துறைமுகங்களில்கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கூண்டுக்குள் பூனை
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு ஒரு சரக்கு கப்பல் வந்தது. அதில் கொண்டு வரப்பட்ட கன்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பொம்மைகள் இருந்த கன்டெய்னரில் ஒரு கூண்டுக்குள் பூனை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பூனைக்கு ‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்ததால், இதுகுறித்து உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து, பூனையை பத்திரமாக மீட்டுச் சென்று, சோதனைக்கு உட்படுத்தினர். இதில் பூனைக்கு ‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, துறைமுகத்திலேயே தனி இடத்தில் ஒரு கூண்டில் அந்த பூனை பராமரிக்கப்பட்டு வருகிறது. பூனையை கன்டெய்னரில் அனுப்பியது யார் என்பது குறித்து துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தவறுதலாக கன்டெய்னரில் ஏறிவிடும் விலங்குகள் இதுபோல வேறு நாடுகளுக்கு வந்துவிடுவது உண்டு. உணவு பொட்டலங்கள் வந்த கன்டெய்னருக்குள் பாம்புகளைக்கூட பார்த்துள்ளோம். ஆனால் தற்போது, பீட்டா அமைப்பினர் கூறுவதுபோல, பூனை தானாக கன்டெய்னரில் ஏறவில்லை.வேண்டுமென்றே யாரோ கூண்டுக்குள் அடைத்து கன்டெய்னரில் வைத்துள்ளனர். திட்டமிட்டே அதை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர்.
மீண்டும் சீனாவுக்கு..
துறைமுக விதிமுறைப்படி, வெளிநாடுகளில் இருந்து வரும் கன்டெய்னரில் உயிருடன் ஏதாவது விலங்குகள் இருந்தால், அதை பிடித்து விலங்குகள் பராமரிப்பு மையத்துக்கு அனுப்ப வேண்டும். 3 நாட்கள் அங்கு வைத்திருந்து, சம்பந்தப்பட்ட யாரும் உரிமை கோராவிட்டால், அந்த விலங்கை மீண்டும் அதே நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். எனவே, அந்தபூனை இன்னும் சில நாட்களில் சீனாவுக்கே திருப்பி அனுப்பப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பணி நீக்கம்
இதற்கிடையில், கன்டெய்னரில் சீனப் பூனை இந்தியாவுக்கு வந்ததகவல் மற்றும் பூனையின் புகைப்படம் வெளியானது தொடர்பாகவும் துறைமுக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். துறைமுகத்தில் பணியாற்றும் தனியார் காவலாளி மூலம் அந்த தகவல் வெளியானது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT