Published : 06 Mar 2020 08:20 AM
Last Updated : 06 Mar 2020 08:20 AM

சென்னையில் அனுமதித்த அளவைவிட அதிக ஒலி மாசு- உடல், மனநல பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை

சென்னை

சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒலி மாசு அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் உடல், மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா போன்ற மாநகரங்களில் ஒலி மாசின் அளவைப் பதிவு செய்து, அதை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுறுத்தி வருகிறது.

சென்னையில் கடந்த 2011 முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கண் மருத்துவமனை (அமைதி பகுதி), தியாகராயநகர் (வணிகம்), பெரம்பூர் (வணிகம்), திருவல்லிக்கேணி (குடியிருப்பு) உள்ளிட்ட 5 இடங்களில் ஆண்டு முழுவதும் ஒலி மாசுவின் அளவுகணக்கிடப்பட்டது. அந்த தரவுகளின்படி, சென்னையில் பெரும்பாலான நாட்களில் ஒலி மாசு அளவு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகரித்துள்ளது.

திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு 365 நாட்கள் பகலிலும், 359 நாட்கள் இரவிலும் ஒலி மாசுவை கணக்கிட்டதில், அனைத்து நாட்களிலும் ஒலிமாசு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவே இருந்ததாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தியாகராயநகரிலும் அனைத்து நாட்களிலும் ஒலி மாசு அதிகமாகவே இருந்துள்ளது. மேலும் கண் மருத்துவமனை அருகில் இரவு நேரங்களில் மட்டும் அனைத்து நாட்களிலும் ஒலி மாசு அதிகமாக இருந்துள்ளது.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

தியாகராயநகரில் இரவு நேரங்களில் 308 நாட்கள், பெரம்பூரில் பகல் நேரத்தில் 359 நாட்கள், திருவல்லிக்கேணியில் பகல்நேரத்தில் 358 நாட்கள், ஒலி மாசுஅளவு 75 டெசிபல் வரை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 6 ஆண்டுகளுக்கு முன்பே ஒலி மாசு அளவு அதிகரித்திருந்த நிலையில், அதைக் குறைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆய்வு அறிக்கை வெளியீடு

இந்நிலையில், நாட்டின் பல்வேறு மாநகரங்களில் கடந்த 2018-ம்ஆண்டு வரை கணக்கிடப்பட்ட ஒலி மாசு அளவை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில் ஒலி மாசு கணக்கிடப்படும் இடங்களின் எண்ணிக்கை 10 ஆகஉயர்ந்துள்ளது. பல்வேறு நகரங்களில் பதிவான ஒலி மாசு அளவைஒப்பிடும்போது, சென்னையில் ஆண்டு சராசரி ஒலி மாசு அளவுஅதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, சென்னையில் பகல் நேர ஒலி மாசு அளவு 67.8 டெசிபலாகவும், இரவு நேரங்களில் 64 டெசிபலாகவும் உள்ளது. பகல், இரவு நேர ஒலி மாசு அளவு முறையே 67.1, 62.3 டெசிபலுடன் ஹைதராபாத் 2-ம் இடத்திலும், 66.6, 63.5 டெசிபலுடன் கொல்கத்தா 3-ம் இடத்திலும் உள்ளது.

சென்னையில் ஒலி மாசு அதிகமாக இருப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ``சென்னையில் பெரும்பாலும் வாகனங்களால்தான் ஒலிமாசு அதிகரிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த மாநகர காவல்துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x