Published : 21 Aug 2015 08:46 AM
Last Updated : 21 Aug 2015 08:46 AM
சென்னையை ஒட்டி முகப்பேரில் அமைந்துள்ள மயானம் முறையாக பராமரிக்கப் படாததால், அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். சென்னை மாநகராட்சி மயானத்தின் அடிப் படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் முகப்பேர் கிழக்குப் பகுதியில், கோல்டன் ஜார்ஜ் ரத்தினம் சாலையில் இந்து மதத்தினருக் கான மயானம் அமைந்துள்ளது. இந்த மயானம் பல ஆண்டுக ளாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. இப்பகுதி, சென்னை மாநகராட்சி யோடு இணைக்கப்பட்ட பிறகும் இந்த அவலம் தொடர்வதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
இதுகுறித்து, முகப்பேர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது: கூவம் நதியை ஒட்டி அமைந்துள்ள இந்த மயானம் சுமார் 70 ஆண்டுகள் பழமையானது. சென்னை மாநகராட்சியின் 92-வது வார்டு மற்றும் 91, 93 வார்டுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பயன்பாட்டுக்கானது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2.15 ஏக்கர் பரப்பள வில் பரந்து விரிந்து காணப்பட்ட இந்த மயானம், பல்வேறு காரணங் களால் தற்போது அரை ஏக்கராக சுருங்கிவிட்டது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், தகன மேடை பாழடைந்த நிலையில் உள்ளது. மயானப் பகுதிகளில் மண் குவியல்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
இதனால், சடலங்களை தகனம் செய்வதிலும், புதைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. முகப்பேர் பகுதி, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த அவலம் தொடர்கிறது. பொருளாதார வசதியுள்ளவர்கள், தங்கள் குடும்பங்களில் இறப்பு ஏதுவும் நிகழ்ந்தால், 6 கி.மீ. தூரத்துக்கு மேல் கடந்து சென்று, அம்பத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளில் உள்ள எரிவாயு மேடையில் தகனம் செய்கின்றனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகம், இந்த மயானத்துக்கு சுற்றுச் சுவர் அமைத்து, தண்ணீர் வசதி, தகன மேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தரப்பில் பேசியவர்கள், ‘சம்பந்தப்பட்ட மயானத்தின் மொத்தபரப்பு உள்ளிட்ட விவரங் களை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அந்த விவரங்கள் கிடைத்த பிறகு, மயானத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT