Last Updated : 05 Mar, 2020 05:56 PM

 

Published : 05 Mar 2020 05:56 PM
Last Updated : 05 Mar 2020 05:56 PM

புதுச்சேரி கடற்கரையோரப் பகுதிகளில் இந்த ஆண்டில் 10,100 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு; வனத்துறையினர் நடவடிக்கை 

புதுச்சேரி 

இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வமானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான்.

இந்த வகை ஆமை இனங்கள் இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக்கூடியவை. இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள், புதுச்சேரி, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட கடலோரப் பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

குறிப்பாக, மணற்பரப்பு அதிகமுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த கனக செட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம் வரை கடலோரப் பகுதிகளில் இந்த ஆமைகள் அதிக அளவு முட்டையிட்டுச் செல்வது வழக்கம். ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழிந்து வரும் நிலையில் அவற்றைப் பாதுகாக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

முட்டைகளை, வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர், உள்ளூர் இளைஞர்களின் துணையுடன் சேகரித்து வைத்து பாதுகாத்து, குஞ்சு பொரித்ததும் பத்திரமாக மீண்டும் கடலில் விட்டு வருகின்றனர்.

இதுபோல, இந்த ஆண்டும் வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், ஜெகதீசன், கிருஷ்ணசாமி, பாலசுப்பிரமணியன், தணிகவேல், மகேஷ்வர கணபதி ஆகியோர் கொண்ட குழுவினர் உள்ளூர் இளைஞர்கள் துணையுடன் கனகசெட்டிக்குளம் முதல் புதுக்குப்பம் வரை உள்ள கடற்கரை பகுதியில் ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளை கடந்த நவம்பர் மாதம் முதல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேகரிக்கும் முட்டைகளை குஞ்சு பொரிக்க பூரணாங்குப்பம் புதுக்குப்பம், நரம்பை கடற்கரையில் மணலில் புதைத்து வைத்துள்ளனர். தவளக்குப்பம் அடுத்துள்ள பூரணாங்குப்பம் புதுக்குப்பம் கடற்கரையில் வனத்துறை ஊழியர்கள் இன்று 240 ஆமை முட்டைகளைச் சேகரித்தனர். பின்னர் அவற்றைப் பாதுகாப்பாக மணலில் புதைத்து வைத்தனர்.

இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, ‘‘ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளைப் பாதுகாக்க ஆண்டுதோறும் அதன் முட்டைகளைச் சேகரித்து பாதுகாத்து வருகிறோம். அதுபோல் இம்முறை கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 10,100 முட்டைகள் சேகரித்து பாதுகாப்பாக வைத்துள்ளோம். மேலும் பல முட்டைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதிகபட்சமாக 14 ஆயிரம் முட்டைகளைச் சேகரித்தோம். இவ்வாறு சேகரித்து வைக்கப்படும் முட்டைகள் 48 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வரும். பின்னர் அவை கடலில் விடப்படும்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x